×

எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை பாஜகவினர் எரிப்பதா? - ஜெயக்குமார் ஆவேசம்

 

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை எரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். 

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. அ.தி.மு.க. தலைமை கழகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த எடப்பாடி பழனிசாமிக்கு நிர்வாகிகளும், தொண்டர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி குறித்தும், நாடாளுமன்ற தேர்தல் வர இருப்பதால் கட்சி பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இன்னும் ஒரு மாதத்தில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்துவது குறித்தும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-  பாஜக உடனான கூட்டணி தொடர்கிறது. கூட்டணி குறித்து அதிமுக எந்த சர்ச்சையான கருத்தும் கூறவில்லை. எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை எரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது போன்ற செயல்களை ஊக்கப்படுத்தாமல் பாஜக நடவடிக்கை எடுக்க வேண்டும். அண்ணாமலை தலைவர்கள் பற்றி கூறுவது அவருடைய தனிப்பட்ட கருத்து. எங்களுடைய தலைவருக்கு நிகரானவர் இனி தமிழ்நாட்டில் பிறக்கப் போவது கிடையாது. ஓ.பன்னீர்செல்வம் கட்சி நடத்தவில்லை, கடை நடத்தி வருகிறார். ஓ.பன்னீர்செல்வத்திடம் இருந்து யார் வந்தாலும் தாயுள்ளத்தோடு வரவேற்போம். இவ்வாறு அவர் கூறினார்.