×

முன்னாள் திமுக அமைச்சர் எ.வ வேலுவுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன்..!

 

தமிழகத்தில், 2021 முதல் 2026 வரை நடந்த, தி.மு.க., ஆட்சியில், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்தவர் வேலு. தற்போது, திருவண்ணாமலை தொகுதி எம்.எல்.ஏ.,வாக உள்ளார். இவர் அமைச்சராக இருந்தபோது, நெடுஞ்சாலைத் துறையில், சாலை அமைக்காமலே, பணம் எடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக, அறப்போர் இயக்கம், சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் அலுவலகத்தில், கடந்த 2022ம் ஆண்டு புகார் அளித்தது. தி.மு.க., ஆட்சி நடந்ததால், இப்புகார் மீது, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல், காலம் தாழ்த்தி வந்தனர். தற்போது த.வெ.க., அரசு பொறுப்பேற்ற நிலையில், வேலு மற்றும் அரசு அதிகாரிகளான பொறியாளர்கள் ஒன்பது பேர் மீதும், கரூரை சேர்ந்தவரும், தி.மு.க., முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் நெருங்கிய நண்பருமான, ஒப்பந்ததாரர் சங்கர் ஆனந்த் மீதும், சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பது தொடர்பாக, லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள், அரசிடம் ஒப்புதல் பெற்றனர்.

அதன் அடிப்படையில் கரூரில், சாலையே போடாமல், 3.23 கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பதாக, தி.மு.க., முன்னாள் அமைச்சர் வேலு உள்ளிட்ட 11 பேர் மீது, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.கடந்த 25 ம் தேதி, சென்னை, ஆழ்வார்பேட்டை லாப்தி காலனியில் உள்ள வேலு வீடு உட்பட நான்கு இடங்களிலும், கரூரில் ஏழு, திண்டுக்கல்லில் இரண்டு, கோவையில் இரண்டு, திருப்பூரில் ஒன்று என, 20 இடங்களில், லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடத்தினர். முடிவில், 40 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். ஆனால், இதனை வேலு மறுத்து இருந்தார்.

இந்நிலையில் நேரில் விசாரணைக்கு ஆஜராகும்படி வேலுவுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.