காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரியின் மனைவி காலமானார்!
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், கடலூர் மாவட்டத்தின் மூத்த அரசியல் தலைவருமான கே.எஸ். அழகிரி அவர்களின் மனைவி வத்சலா (65), உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில் காலமானார். கடந்த சில வாரங்களாக உடல்நலப் பாதிப்பால் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும், சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
மறைந்த வத்சலா அவர்களுக்கு நான்கு மகள்கள் உள்ளனர். இவரது மறைவுச் செய்தி அறிந்த அரசியல் கட்சித் தலைவர்கள் கே.எஸ். அழகிரிக்குத் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலரும் சென்னை மருத்துவமனைக்குச் சென்று கே.எஸ். அழகிரிக்கு நேரில் ஆறுதல் கூறி வருகின்றனர்.
வத்சலாவின் உடல் இறுதிச் சடங்கிற்காக அவரது சொந்த ஊரான கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள திருப்பணிநத்தம் கிராமத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்குள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள உடலுக்குப் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதனைத் தொடர்ந்து, திங்கள்கிழமை (இன்று) மாலை 5 மணி அளவில் அவரது இறுதிச் சடங்குகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.