முன்னாள் முதல்வர் ஸ்டாலின் பட்டிமன்ற பேச்சாளராக மாறி விட்டார்: அமைச்சர் ராஜ்மோகன்..!
திருநெல்வேலியில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கூறியதாவது:
என்னை எப்போது பார்த்தாலும் முதல்வராக இருந்த ஸ்டாலின் நன்றாக பேசக்கூடியவர் என பாராட்டுவார். தற்போது அரசியலுக்காக அவர் பேசுகிறார். முதல்வர் விஜய் நேரலை நாயகன். சட்டசபையில் என்ன நடக்கிறதோ, அதை முழுமையாக நேரடியாக ஒளிபரப்புகிறோம். திருக்குறள் ஒலிப்பது முதல் சட்டசபை முடியும் வரை நேரலை செய்யப்படுகிறது.தற்போது பள்ளி மாணவர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் சட்டசபை நடவடிக்கைகளை நேரடியாக பார்த்து வருகின்றனர்.
முந்தைய தி.மு.க., ஆட்சியில் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி பேசியதை காண்பிக்கவில்லை என அவர் சட்டசபைக்கு வெளியே வந்து கூறியுள்ளார். ஆனால் தற்போது எதிர்க்கட்சித்தலைவர் பேசுவது முழுமையாக ஒளிபரப்பப்படுகிறது.முதல்வர் சட்டசபையில் பேசும்போது தி.மு.க.,வினர் எழுந்து நின்று கோஷமிட்டனர். இது நியாயமா.
எதிர்க்கட்சித் தலைவர் வரிக்கு வரி விமர்சனம் செய்தார். நாங்கள் யார் தயவிலும் ஆட்சி நடத்தவில்லை. மக்களின் தயவிலும், குறிப்பாக பெண்களின் ஆதரவிலும் தான் ஆட்சி நடத்துகிறோம்.தற்போதைய சட்டசபை வளாகத்தில் இடநெருக்கடி உள்ளது. பார்வையாளர்கள், தலைவர்களை சந்திக்க வருபவர்கள் என கூட்டம் அதிகரித்துள்ளது. எனவே புதிய தலைமைச்செயலகம் தேவையாக உள்ளது. மக்களின் நலன் சார்ந்து முதல்வர் முடிவெடுப்பார்.பன்னாட்டு நிறுவனங்கள் பல்வேறு இடங்களில் செயல்படுகின்றன. அந்த நிறுவனங்களின் இடங்களுக்கே சென்று பேச்சுவார்த்தை நடத்துவது தான் சரியான நடைமுறை. அதனால் தான் லண்டனில் பேச்சுவார்த்தை நடந்தது.
முன்னாள் முதல்வர் பழனிசாமி கோட் சூட் அணிந்து வெளிநாடு சென்றதை நினைவில் வைத்துள்ளோம். முதலீடுகள் தொடர்பான பேச்சுவார்த்தை முடிந்ததும் முழுமையான அறிக்கை வெளியிடப்படும். மார்க்சிஸ்ட் செயலாளர் சண்முகம் பேசுவது அவரது உரிமை. அவர் அனுபவமிக்கவர். அவர் கூறுவதில் எவற்றை ஏற்றுக்கொள்ள முடியுமோ அவற்றை ஏற்றுக்கொள்வோம் என்றார்.