பிரதமர் மோடிக்கு முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கடிதம்!
பிரதமர் மோடி தமிழகம் வருகையானது அரசியல் ரீதியாகவும் கவனம் பெற்றுள்ளது. தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்களே உள்ள நிலையில் தேர்தலுக்கு இப்போதே அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. அந்த வகையில் தான் பிரதமர் மோடியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசுகிறார். தூத்துக்குடி வரும் பிரதமர் மோடியுடன் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேச உள்ளார்.
இந்த நிலையில், தூத்துக்குடி வரும் பிரதமர் மோடியை சந்திக்க அனுமதி கேட்டு முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் உங்களை வரவேற்பதற்கோ அல்லது வழி அனுப்பவோ அனுமதி தர வேண்டும் என்றும், அனுமதி கிடைத்தால் அதனை பாக்கியமாக கருதுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதிமுக பாஜக இடையே கூட்டணி அமைந்துள்ள நிலையில் மற்ற கட்சிகளை கூட்டணிக்கு சேர்க்க முயற்சிகள் ஒருபுறம் நடந்து வருகிறது. ஆனால் இந்த கூட்டணியில் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், ஓ பன்னீர் செல்வம் அதிமுக உரிமை மீட்பு குழு இருக்கிறதா என்பதை அமித்ஷா உறுதிப்படுத்தவில்லை. இதனால் ஓ பன்னீர் செல்வம் மீண்டும் அதிமுகவில் சேர விருப்பம் தெரிவித்ததாகவும், அதற்கு காலம் கடந்துவிட்டது என்று எடப்பாடியும் கூறிவிட்டார். இதனால் அரசியலில் அடுத்து விஜய்யுடன் ஓ பன்னீர்செல்வம் கூட்டணி செல்லலாம் என்றும், மூன்றெழுத்து கட்சி தான் அடுத்து ஆட்சி அமைக்கும் என்றும் அவரது அணி சார்பில் பேசப்பட்டது. இந்த நிலையில் பிரதமர் மோடியை சந்திக்க அனுமதி கேட்டு கடிதம் எழுதியிருப்பது அரசியல் ரீதியாக கவனம் பெற்றுள்ளது.