×

வரலாற்றில் முதல்முறை! - கடலில் அட்டகாசம் செய்த இலங்கை கொள்ளையனை விரட்டிப் பிடித்த தமிழக மீனவர்கள்..!

 

நாகபட்டினம் மாவட்டம் செருதூரை சேர்ந்த சக்திமயில் (40), அபிமன் (30), பாலசுப்பிரமணியன் (30), பழனிசாமி (29), கன்னியாகுமரி உவரி பகுதியை சேர்ந்த அபி (28) ஆகிய 5 மீனவர்கள், கடந்த 25 ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு ஃபைபர் படகு ஒன்றில் செருதூரில் இருந்து மீன்பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர்.

இவர்கள் நேற்றிரவு 11 மணியளவில் ஆற்காட்டுத்துறைக்கு தென்கிழக்கே 9 நாட்டிகல் மைல் தூரத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ஒரு அதிவேக ஃபைபர் படகில் வந்த 3 பேர் செருதூர் மீனவர்கள் கடலில் விரித்திருந்த மீன்பிடி வலையை அறுக்க முற்பட்டுள்ளனர்.

இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் இலங்கையைச் சேர்ந்த ஒருவரை தமிழக மீனவர்கள் பிடித்த நிலையில், மற்ற இரண்டு பேரும் அவர்கள் வந்த அதிவேக ஃபைபர் படகில் தப்பிச் சென்று விட்டனர். பிடிபட்ட நபரிடம் மீனவர்கள் விசாரணை நடத்தியதில், அவர்கள் மூவரும் கொள்ளையடிக்க வந்தவர்கள் என்பது தெரிய வந்தது.

மேலும் அந்த நபரிடம் நடத்திய விசாரணையில் அவர், இலங்கை காங்கேசன்துறை வழலையைச் சேர்ந்தவர் என்பதும், அவர் பெயர் அயந்தன் (27) என்பதும் தெரிய வந்தது. அயந்தன் தமிழில் பேசியதால், அவரை தமிழக மீனவர்கள் செருதூர் மீன்பிடி இறங்குதளத்திற்கு கொண்டு வந்தனர். அவரை அதிகாரிகளிடம் தமிழக மீனவர்கள் ஒப்படைத்தனர்.

கடலில் மீனவர்கள் தாக்கியதில் அயந்தனின்‌ வலது கண் புருவம், இடது பக்க தலை ஆகிய இடங்களில் ரத்தக் காயமும், நெற்றியில் வீக்கமும் ஏற்பட்டதால் சிகிக்சைக்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.

இது குறித்து கீழையூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வரலாற்றில் முதல்முறையாக தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்கொள்ளையன் பிடிப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.