×

விஸ்கி, வோட்கா பெயர்களில் ஐஸ்கிரீம் விற்ற பிரபல கடைக்கு உணவுப் பாதுகாப்புத் துறை சீல்!

 

சென்னை, அண்ணாநகரை அடுத்த திருமங்கலத்தில் இயங்கி வரும் பிரபல ஐஸ்கிரீம் கடையில் மதுபானம் கலந்த ஐஸ்கிரீம்கள் விற்கப்படுவதாக தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறைக்கு புகார் வந்துள்ளது. இதையடுத்து, திருவள்ளுர் மாவட்ட உணவு நியமன அலுவலர் கதிரவன் உத்தரவின் பேரில், அம்பத்தூர் உணவு பாதுபாப்புத்துறை அதிகாரி ரவிச்சந்திரன் தலைமையிலான குழு சர்ச்சைக்குள்ளான கடைக்கு கடந்த ஜுலை 6 அன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும், அங்கு விற்கப்படும் ஐஸ்கிரீம்களின் மாதிரிகளை அவர்கள் ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர். அத்துடன் ஐஸ்கிரீம்களில் கலக்கப்படும் ஃப்ளேவர்களையும் அதிகாரிகள் எடுத்துச் சென்று ஆய்வுக்கு உட்படுத்தினர். இதில் ஐஸ்கிரீம்களில் மதுபானம் கலக்கப்படவில்லை என்பது உறுதியானது. இருப்பினும், விஸ்கி ஐஸ்கிரீம் (Whiskey Ice Cream), வோட்கா ஐஸ்கிரீம் (Vodka Ice Cream), ரம் ஐஸ்கிரீம் (Rum Ice Cream) என்கிற பெயரில் விற்பனைச் செய்த ஐஸ்கிரீமை வயது வரம்பு பாராமல் சிறுவர்களுக்கும் விற்பனைச் செய்ததாக கூறி அக்கடைக்கு சீல் வைத்துள்ளனர்.

இதுதவிர, ஐஸ்கிரீமை ஆய்வுக்கு உட்படுத்தியதில் அது தரமற்ற நிலையில் தயாரிக்கப்பட்டதும் தெரிய வந்துள்ளது. அத்துடன், காய்கறி கொழுப்பில் இருந்து தயாரிக்கப்பட்ட ஒன்றை ஐஸ்கிரீம் என கூறி விற்பனை செய்தது, இயற்கையான ஐஸ்கிரீம் என போலியான தகவலை கூறி பதாகை வைத்தது, வணிக இடம் குறித்த தவறான விவரங்களை அளித்தது என பல்வேறு முறைகேடுகளில் இந்த ஐஸ்கிரீம் கடை ஈடுபட்டிருந்ததும் கண்டறியப்பட்டு உள்ளது.

இந்த விதிமுறைகள் மீறலின் அடிப்படையிலேயே உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திருமங்கலத்தில் செயல்பட்டு வந்த ஐஸ்கிரீம் கடைக்கு சீல் வைத்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.