"பைக் டாக்ஸி புக் செய்யும் பெண்களே கவனம்!" – ஓட்டுநரின் வக்கிரப் பேச்சை அம்பலப்படுத்திய இளம்பெண்!
பெங்களூருவில் ரேபிடோ (Rapido) பைக் டாக்ஸி ஓட்டுநர் ஒருவர், பெண் பயணி ஒருவரிடம் தொலைபேசியில் பாலியல் ரீதியாக அத்துமீறிப் பேசிய சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அந்தப் பெண் வெளியிட்ட ஆடியோ ஆதாரத்தைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட ஓட்டுநரைப் பணிநீக்கம் செய்து ரேபிடோ நிறுவனம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
பெங்களூருவைச் சேர்ந்த பெண் ஒருவர் எக்ஸ் (X) சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், ரேபிடோ பைக் டாக்ஸி ஓட்டுநருக்கும் தனக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடலைப் பகிர்ந்துள்ளார். அந்த ஆடியோ பதிவில், குறிப்பிட்ட இடத்திற்கு வந்துவிட்டதாக ஓட்டுநர் கூறியதைத் தொடர்ந்து, "நீங்கள் வந்தவுடன் எனக்கு அழைத்துத் தெரிவிக்க வேண்டாமா? தகவல் சொல்லாமல் கிளம்பிப் போனால் எப்படி?" என்று அந்தப் பெண் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்குப் பதிலளித்த அந்த ஓட்டுநர், கன்னட மொழியில் மிகவும் ஆபாசமாகவும், பாலியல் இச்சைக்கு அழைக்கும் விதத்திலும் அத்துமீறிப் பேசியுள்ளார்.
தொடர்ந்து, அந்த ஓட்டுநரின் புகைப்படம் மற்றும் விவரங்களை ஸ்கிரீன்ஷாட் எடுத்துப் பகிர்ந்த அந்தப் பெண், அவர் பிரசாந்த் நாயக் பிரஷு என்பதும், KA45U3582 என்ற பதிவெண் கொண்ட ஹீரோ ஸ்பிளெண்டர் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்ததும் தெரியவந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய தனிநபர்களின் மோசமான நடத்தையால், ரேபிடோ மற்றும் உபர் போன்ற செயலிகளை நம்பி நேர்மையாக உழைக்கும் மற்ற ஓட்டுநர்களின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுவதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார். "வெளியூர்களிலிருந்து வந்து படிப்பவர்களும், பெற்றோரிடம் பணம் கேட்க முடியாத சூழலில் இருப்பவர்களும் பகுதிநேரமாக ரேபிடோ ஓட்டிச் சிறிய தொகையைச் சேமிக்கிறார்கள். ஒரு ஓட்டுநர் இதுபோல நடந்து கொள்வதால், ஒட்டுமொத்த ரேபிடோ ஓட்டுநர்களுக்கும் கெட்ட பெயர் ஏற்படுகிறது" என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், பெண் பயணிகள் இதுபோன்ற செயலிகளில் பயணம் முன்பதிவு செய்யும்போது மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும், ஓட்டுநர்களின் பேச்சு மற்றும் அணுகுமுறையைக் கவனித்த பிறகே பயணத்தைத் தொடர வேண்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக வெளியான செய்தியைத் தொடர்ந்து, ரேபிடோ நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ விளக்கத்தை வெளியிட்டுள்ளது. அதில், "மைசூருவில் பெண் பயணி ஒருவரிடம் பைக் டாக்ஸி ஓட்டுநர் முறையற்ற வகையில் நடந்துகொண்ட சம்பவம் குறித்து நாங்கள் மிகுந்த கவலை கொள்கிறோம். இத்தகைய அனுபவம் எவ்வளவு மன உளைச்சலைத் தரும் என்பதை நாங்கள் உணர்கிறோம்; இதற்காகப் பயணியிடம் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்தச் சம்பவம் குறித்து உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட ஓட்டுநர் ரேபிடோ தளத்திலிருந்து உடனடியாக நீக்கப்பட்டுள்ளார் என்றும், பயணிகளின் குறிப்பாகப் பெண்களின் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்திற்குத் தாங்கள் அதிக முக்கியத்துவம் அளிப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. எவ்விதமான தவறான நடத்தையையும் சகித்துக்கொள்ள முடியாது என்றும், விதிகளை மீறும் ஓட்டுநர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரேபிடோ நிறுவனம் உறுதியளித்துள்ளது.
A woman in Bengaluru has alleged that a Rapido driver asked her for sexual favours when she called him to ask if he had arrived at the location. In a video widely circulated on the social media platform X, the woman, whose identity remains unknown, shared a voice recording of the call.
— The Siasat Daily (@TheSiasatDaily) November 11, 2026
A woman in Bengaluru has alleged that a Rapido driver asked her for sexual favours when she called him to ask if he had arrived at the location. In a video widely circulated on the social media platform X, the woman, whose identity remains unknown, shared a voice recording of the call.
— The Siasat Daily (@TheSiasatDaily) November 11, 2026