×

ரூ.6,431 கோடியில் கட்டப்பட்ட பாலம் திடீரென உள்வாங்கியதால் பரபரப்பு- போக்குவரத்து நிறுத்தம்

 

சிதம்பரம் அருகே தேசிய நெடுஞ்சாலை பாலம் 10 அடிக்கு மேல் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை சிதம்பரம் வழியாக செல்கிறது. சிதம்பரம் புறவழிச் சாலையில் கொள்ளிடம் ஆற்றின் மேல் பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் இணைப்புச்சாலை மற்றும் பாலம் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் வரை செல்கிறது. இந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலையின் எருக்கன்காட்டுபடுகை என்ற இடத்தில் நேற்று சாலை பணி நடந்துள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை திடீரென பாலத்தின் இணைப்புச் சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. சுமார் 50 மீட்டர் தூரத்திற்கு, 15 அடி ஆழத்திற்கு பாலத்தின் மேல் உள்ள சாலை திடீரென உள் வாங்கியது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேசிய  நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடியாக பாலத்தில் போக்குவரத்தை நிறுத்தினர். பின்னர் கடவாச்சேரி என்ற இடத்திலிருந்து பழைய கொள்ளிடம் ஆற்றுப்பாலத்தின் வழியே போக்குவரத்து மாற்றி இயக்கப்பட்டு வருகிறது. பாலம் உள்வாங்கிய இடத்திற்கு அருகே குடியிருப்பு பகுதியில் உள்ளதால் இந்த பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். குடியிருப்பு பகுதிகளை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி உடனடியாக காலி செய்ய வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளதால் பெரும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த பாலத்தை கட்டும்போது நாங்கள் சரிவர கட்டவில்லை என்று அதிகாரிகளிடம் புகார் அளித்தோம். ஆனால் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை பெயரளவுக்கு பாலத்தை கட்டி விட்டு தற்போது எங்களுக்கு பேராபத்தை ஏற்படுத்தி விட்டார்களா என குற்றம் சாட்டினர். தற்போது உள்வாங்கிய பாலத்தின் பகுதியை உடைத்து எடுக்கும் பணியில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணிகள் முடிவடைவதற்கு சில நாட்கள் ஆகும் எனக் கூறப்படுவதால் ஒரு சில நாட்களுக்குப் பிறகே கொள்ளிடம் பாலத்தில் போக்குவரத்து மீண்டும் துவங்கும் நிலை ஏற்பட்டு இருக்கிறது.