காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு- மருத்துவமனைகளில் படுக்கைக்கு 12 மணி நேரம் காத்திருப்பு
சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், மருத்துவமனைகளில் படுக்கைக்கு 12 மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
சுவாசத் தொற்றுகள், இன்ஃப்ளுயன்சா, எச்1என்1 மற்றும் டெங்கு பாதிப்புகள் அதிகரிப்பால், தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகள் வருகையும், படுக்கை தேவையும் அதிகரித்துள்ளது. அவசர சிகிச்சைப் பிரிவில் அறை அல்லது படுக்கைக்காக 12 மணி நேரம் வரை காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆர்எஸ்வி, அடினோ வைரஸ், ரைனோ வைரஸ், பாரா இன்ஃப்ளுயன்சா உள்ளிட்ட சுவாச வைரஸ் தொற்றுகளும் பரவி வருகின்றன. பெரும்பாலானோர் மருந்து மற்றும் ஓய்வு மூலம் குணமடைந்தாலும், சிலருக்கு நெபுலைசேஷன் அல்லது நரம்புவழி திரவ சிகிச்சை தேவைப்படுகிறது.
முதியவர்கள் மற்றும் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், இதய, சிறுநீரக நோய், புற்றுநோய் உள்ளிட்ட இணைநோய் உள்ளவர்களுக்கு பாதிப்பு தீவிரமாகும் வாய்ப்பு அதிகம். குழந்தைகள் மற்றும் இளம் வயதினரிடம் அதிக காய்ச்சல், கடுமையான சோர்வு, உணவு உட்கொள்ள முடியாமை மற்றும் சிலருக்கு காய்ச்சல் காரணமான குழப்பநிலை காணப்படுகிறது. கடுமையான பாதிப்புகள் குறைவாக இருந்தாலும், குறிப்பாக முதியவர்கள் மற்றும் இணைநோய் உள்ளவர்களிடம் சிகிச்சை தாமதம் உயிரிழப்புக்கு காரணமாகலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.