×

கொசஸ்தலை ஆற்றில் காட்டாற்று வெள்ளம்- தாழ்வான பகுதியில் வசிப்போருக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

 

கனமழை எதிரொலியாக பூண்டி நீர்த்தேக்கம் நிரம்பி வருவதால் 38,000  கன அடி நீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இது மேலும் அதிகரிக்கப்படும் என அதிகாரிகள் வெள்ள எச்சரிக்கை விடுத்துள்ளனர் 


இதனால் கொசஸ்தலை ஆற்றில் இரு கரைகளிலும் வசிக்கும் மக்களை காப்பாற்றும் வகையில் தமிழக அரசானது முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக சென்னை மணலி புது நகர் பகுதிக்குட்பட்ட மகாலட்சுமி நகர் பகுதில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதி தாழ்வான பகுதியாகயுள்ளதால்,  வெள்ள நீர் சூழ்ந்துவிடும் அபாயமும் உள்ளது. இதனால் கரையோரங்களில் மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதியில் உள்ள  பொதுமக்களை  சென்னை மாநகராட்சி சார்பில் தற்காலிக முகாம்களான ஜெயகோபால் கரோடியா பள்ளியில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் மணலி புதுநகர் பகுதியில் நள்ளிரவில் அரசு அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், அண்டை மாநிலமான ஆந்திராவில் தொடர் மழையின் காரணமாக பூண்டி நீர்த்தேக்கம் நீர் நிரம்பி வந்தது இதனால் பூண்டி நீர்த் தேக்கத்தில் இருந்து 38 ஆயிரம் கன அடி நீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்படுகிறது. இதனால் பொன்னேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தாழ்வான பகுதிகளில் வசிக்கின்ற பொதுமக்களை முன்னெச்சரிக்கையுடன் மாநகராட்சி பள்ளிகளில் முகாமிட்டு பாதுகாத்து வருகிறோம். மக்கள் யாரும் அஞ்ச வேண்டாம் என தெரிவித்தார்.