×

FLASH NEWS: கார் மீது விழுந்த 1,000 கிலோ ராட்சத கம்பம் - சமாஜ்வாதி கட்சித் தலைவர் பலி!

 

உ.பி பிரதாப்கர் மாவட்டம் அந்து பகுதியில், சமாஜ்வாதி கட்சியின் முக்கிய நிர்வாகி லால் பகதூர் யாதவ் (47) சென்ற கார் மீது, சுமார் 1,000 கிலோ எடையுள்ள ராட்சத மின் கம்பம் விழுந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பாபுகஞ்ச் சந்தை அருகே உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் தொழிலாளர்கள் உயர் அழுத்த மின் கம்பத்தை நிறுவும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அந்தக் கம்பம் சமநிலையை இழந்து அவ்வழியாகச் சென்ற கார் மீது விழுந்ததாகக் கூறப்படுகிறது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உயிரிழந்த லால் பகதூர் யாதவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. அதிக எடையுள்ள கம்பத்தை நிறுவும் போது முறையான பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றாததே இந்த விபத்துக்குக் காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

உயிரிழந்த லால் பகதூர் யாதவ், சமாஜ்வாதி கட்சியில் தீவிரமாக இயங்கி வந்தவர். இவர் கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற நகர் பஞ்சாயத்து தேர்தலில் அந்து தொகுதியில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் பொதுப்பணித் துறை (PWD) ஒப்பந்ததாரராகவும், நாட்டு மதுபான உரிமம் பெற்று தொழில் செய்து வந்தவராகவும் அறியப்படுகிறார். இவரது மறைவு அப்பகுதி சமாஜ்வாதி கட்சியினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.