கோயில்களில் இனி இஷ்டத்துக்கு கொடிமரம் வைக்க முடியாது! இந்து சமய அறநிலையத்துறை சுற்றறிக்கை..!
தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து திருக்கோயில்களிலும் புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்வதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் டி.ஜி. வினய் வெளியிட்டுள்ளார்.
அந்த சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது, "பழுதடைந்த பழைய கொடிமரங்களை அகற்றி புதிய கொடிமரம் அமைப்பது மற்றும் புதிதாக கட்டப்படும் திருக்கோயில்களில் முதன்முறையாக கொடிமரம் பிரதிஷ்டை செய்வது ஆகிய பணிகள் இனி ஆணையரின் முன் அனுமதியுடன் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும்.
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பட்டியலிடப்பட்ட மற்றும் பட்டியலிடப்படாத அனைத்து திருக்கோயில்களிலும் புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்ய ஆணையரின் முன் அனுமதி பெறுவது கட்டாயம்.
பிரதிஷ்டை நடைபெறும் நாளுக்கு குறைந்தது 15 நாட்களுக்கு முன்பாக அனுமதி கோரி விண்ணப்பிக்க வேண்டும். மேலும், விண்ணப்பத்துடன் செயல் அலுவலர், தக்கார் அல்லது அறங்காவலர் குழுவின் தீர்மானம், மண்டல ஸ்தபதியின் கருத்துரு, அர்ச்சகரின் பரிந்துரைக் கடிதம், முகூர்த்த பட்டோலை, வரைபடக் குழுவின் பரிந்துரை, நிர்வாக அனுமதி, புதிய கொடிமரத்தின் வண்ணப் புகைப்படம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் இணைக்கப்பட வேண்டும்.
பழைய கொடிமரம் அகற்றப்பட்டிருந்தால், அதற்கான ஆணையர் உத்தரவு மற்றும் சரிபார்ப்பு அலுவலர்களின் பதிவேட்டு நகல்களும் சமர்ப்பிக்கப்பட வேண்டும். பிரதிஷ்டை நிகழ்வுகள் சட்ட விதிகளுக்கும் ஆகம நெறிமுறைகளுக்கும் உட்பட்டு நடைபெற வேண்டும்.
மேலும் மண்டல உதவி அல்லது துணை ஆணையர், சரிபார்ப்பு அலுவலர், மண்டல ஸ்தபதி, துறை பொறியாளர், சரக ஆய்வாளர், அர்ச்சகர்கள் மற்றும் பக்தர்கள் முன்னிலையில் நிகழ்வு நடத்தப்பட வேண்டும்.
உபயதாரர்கள் மூலம் கொடிமரம் வழங்கப்பட்டால், அவர்களின் சம்மத கடிதம், கொள்முதல் அனுமதி ஆவணம் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் பதிவு செய்யப்பட வேண்டும். இதுவரை கொடிமரம் இல்லாத திருக்கோயில்களில் முதன்முறையாக கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்படுமாயின், மண்டல மற்றும் மாநில வல்லுநர் குழுவின் ஒப்புதலுடன், ஆகம வல்லுநர்களின் கருத்துருவும் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பழைய கொடிமரத்தில் இருந்த கவசங்களை புதிய கொடிமரத்தில் பொருத்துவதற்கு முன் அவை பொருந்துமா? என்பதை உறுதி செய்ய வேண்டும். புதிய செம்பு, பித்தளை, தங்கம் அல்லது தங்க முலாம் பூசப்பட்ட கவசங்களை பொருத்துவதற்கு உரிய துறை அனுமதி பெற வேண்டும்.
மேலும், கொடிமரத்தின் அடியில் வைக்கப்படும் பழைய மற்றும் புதிய விலை மதிப்புள்ள உலோகங்கள், இரத்தினங்கள் உள்ளிட்டவற்றின் விவரங்கள் அனைத்தும் பதிவேட்டில் கட்டாயமாக பதிவு செய்யப்பட வேண்டும்.
கொடிமரப் பணிகள் தொடங்கிய தருணம் முதல் பிரதிஷ்டை நிறைவடையும் வரை அனைத்து பணிகளும் புகைப்படம் மற்றும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு, அவை கோயிலில் நிரந்தர ஆவணமாக பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கான இறுதி அறிக்கையும் ஆணையரிடம் சமர்ப்பிக்க வேண்டும்" என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேபோல், "தவிர்க்க முடியாத காரணங்களால் நிர்ணயிக்கப்பட்ட நாளில் பிரதிஷ்டை நடைபெறவில்லை என்றால், காரணத்தை குறிப்பிட்டு புதிய தேதிக்காக மீண்டும் ஆணையரின் அனுமதி பெற வேண்டும்" என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் மண்டல இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், சரிபார்ப்பு அலுவலர்கள் மற்றும் செயல் அலுவலர்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.