×

அதிராம்பட்டினம் அருகே மீனவர் அடித்துக் கொலை

 

அதிராம்பட்டினம் அருகே இறால் பண்ணை வழியாக நடந்து சென்ற மீனவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் அடுத்த சுந்தரநாயகிபுரம் மங்கனங்காட்டைச் சேர்ந்த பாலசுந்தரம் (52), காபர் ஆகிய இருவரும் போகிப் பண்டிகையன்று அதிராம்பட்டினம் கச்சர்வாடி உப்பளம் பகுதியில் மீன்பிடிக்கச் சென்றனர். இந்த கச்சர்வாடி உப்பளம் பகுதிக்கு செல்லும் வழியில் இறால் பண்ணை ஒன்று உள்ளது. அப்போது காபர் டிபன் வாங்குவதற்காக அதிராம்பட்டினத்திற்கு வந்துவிட்டார். அப்போது தம்பிக்கோட்டையைச் சேர்ந்த மூன்று பேர் பாலசுந்தரத்தை பார்த்து ஏன் இந்த இறால் பண்ணை வழியாக வருகிறீர்கள்? இறால்கள் காணாமல் போகிறது என்று கூறி இரும்பு கம்பியால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பாலசுந்தரம் பலத்த காயமடைந்தார். 

பலத்த காயமடைந்த பாலசுந்தரத்தை தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பாலசுந்தரம் நேற்று உயிரிழந்தார். இது குறித்து இறந்து போன பாலசுந்தரத்தின் மனைவி மாரியம்மாள் (44) அதிராம்பட்டினம் போலீசில் புகார் செய்தார். இந்நிலையில் பாலசுந்தரத்தின் உறவினர்கள் சுமார் 250க்கும் மேற்பட்டோர்  சம்மந்தப்பட்ட நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். சம்மந்தப்பட்ட இறால் பண்ணை வழியாக செல்லும்போது இதுபோல் பலர் தாக்கப்பட்டுள்ளனர். எனவே இறால் பண்ணை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி அதிராம்பட்டினம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

உடனே சம்பவ இடத்திற்கு பட்டுக்கோட்டை போலீஸ் டி.எஸ்.பி. பிருதிவிராஜ்சௌகான், தாசில்தார் பாஸ்கரன் ஆகியோர் விரைந்துவந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதனைத் தொடர்ந்து போராட்டம் நடத்தியவர்கள் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். தற்போது உயிரிழந்த மீனவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.