×

வரலாற்றில் முதன்முறை... லைவில் பேரவை நிகழ்வுகள் - முதல் கேள்விக்கு பதில் சொன்ன முதல்வர் ஸ்டாலின்!

 

திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு இரண்டாம் முறையாக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் நாளையோடு கூட்டத்தொடர் முடிவடைகிறது. நேற்று ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. அம்மா மினி கிளினிக்கை மூடியதால் முதல் நாளிலேயே ஆளுநர் உரையைப் புறக்கணித்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அதேபோல ஆளுநர் நீட் விலக்கு தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்காததைக் கண்டித்து விசிக உறுப்பினர்கள் வெளியேறினர்.

இன்று இரண்டாம் நாள் கூட்டம் தொடங்கியது. அந்த வகையில் இன்றைய சட்டப்பேரவையில் நடக்கும் கேள்வி நேரம் மக்களுக்கு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில் பேரவை நிகழ்வுகள் மக்கள் பார்க்கும் வண்ணம் நேரடி ஒளிபரப்பு செய்வது இதுவே முதன்முறை. இதற்கு பல்வேறு கட்சி தலைவர்களும் வரவேற்றுள்ளனர். பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறுகையில், அவை நடவடிக்கைகளை எந்த தணிக்கையும் இல்லாமல் மக்கள் நேரடியாக அறிந்து கொள்வது மக்களின் ஜனநாயக உரிமை என்ற வகையில் இதை பாமக வரவேற்கிறது என்றார்.

அதேபோல பேரவை நடவடிக்கைகளை முழுமையாக நேரலை செய்யவும், அதற்காக தனித் தொலைக்காட்சி தொடங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்துள்ளார். நேரடி ஒளிபரப்பில் கேள்வி நேரத்தில் முதலாவதாக, பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதி முதல் கேள்வி கேட்டார். விமான நிலையத்திலிருந்து - வண்டலூர் வரை மெட்ரோ சேவை நீட்டிப்படுமா என அவர் கேள்வி எழுப்பினார். இதற்கு முதலமைச்சர் ஸ்டாலின், மெட்ரோ ரயில் சேவையை நீட்டிப்பதற்கான திட்டம் ஆய்வில் உள்ளது என்று பதிலளித்தார்.