×

ஜன. 20-ஆம் தேதி முதல் நேரடி செமஸ்டர் தேர்வுகள்- அமைச்சர் பொன்முடி

 

ஜனவரி 20ஆம் தேதி முதல் அனைத்து செமஸ்டர் தேர்வுகள்  நேரடித் தேர்வாக நடத்தப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். 

கொரோனா காரணமாக கல்லூரிகளில் ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடத்தப்பட்ட நிலையில், தேர்வுகள் நேரடியாக நடத்தப்படும் என அறிவித்ததால் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் மாணவர்கள் நேரடி தேர்வு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட சங்கம்  உட்பட 11 மாணவ அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியை தலைமைச் செயலகத்தில் இன்று சந்தித்தனர். இதைதொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி,  நேரடி தேர்வு எழுத வேண்டுமானால் ஒரு மாதம் கால அவகாசம் வேண்டும் என மாணவர்கள் கேட்டதால் அவர்களின் கோரிக்கை ஏற்று இரண்டு மாதம் கால அவகாசம் கொடுக்கப்பட்டு  ஜனவரி 20 தேதி முதல் தேர்வு நடத்தப்படும் என தெரிவித்தார்.

மாணவர்களின் எதிர் காலத்தை கருத்தில் கொண்டே நேரடி தேர்வுகள் நடத்தப்படுவதாக  கூறிய அமைச்சர், மேலும் ஒட்டுமொத்த மாணவர்களும் இந்த முடிவை ஏற்றுக்கொண்டுள்ளதாக கூறினார். ஜனவரி 20ஆம் தேதி முதல் அனைத்து வகை செமஸ்டர் தேர்வுகளும் நேரடித் தேர்வு முறையில் நடத்தப்படும் என்றும அவர் தெரிவித்தார்.நேரடி தேர்வை எதிர்த்து போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்படும் எனவும் அமைச்சர் பொன்முடி மாணவர்களுக்கு உறுதி அளித்தார்.  மேலும் அனைத்து மாணவர்களும் தினசரி கல்லூரிக்கு வர வேண்டும் என்றும்  இந்த இரண்டு மாதங்களில் அனைத்து பாடங்களும் எடுக்கப்பட்டு  மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.