×

"கண்டுகொள்ளாத தமிழக அரசு ; இனியாவது இதை செய்யுங்க" :  விஜயகாந்த் வேண்டுகோள்

 

 பட்டாசு ஆலை வெடி விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு தாலுகாவிற்கு உட்பட்ட களத்தூரில் வழிவிடு முருகன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலையில் நேற்று திடீர் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 5 பேர் உயிரிழந்தனர். அத்துடன் 8  பேர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  உரிய பாதுகாப்பின்றி கவனக்குறைவாக செயல்பட்ட காரணத்தினால் பட்டாசு ஆலையின் உரிமத்தை மாவட்ட ஆட்சியர் தற்காலிகமாக ரத்து செய்துடன்,  உரிமையாளர் வழிவிடு முருகனை தேடி வருகின்றனர். அத்துடன் பட்டாசு ஆலை விபத்தில் பலியான 5 பேர் குடும்பத்திற்கு  தலா 3 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சமும்  வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  "ஆங்கில புத்தாண்டு நாளில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஆ.புதுப்பட்டி கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. தொடர்ந்து நடைபெற்று வரும் பட்டாசு வெடி விபத்துக்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு தேமுதிக சார்பில் ஏற்கனவே பலமுறை அறிக்கை அளித்தும்  தமிழக அரசு நடவடிக்கை எடுக்கத் தவறியதால் இதுபோன்ற விபத்துகள் நடைபெறுகிறது.

இனிவரும் காலங்களில் பட்டாசு விபத்துக்களை தடுக்க உரிமம் இல்லாத பட்டாசு ஆலைகளை கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்வதுடன்,  தமிழக அரசு துறை சார்ந்த தனி குழுவை அமைத்து பட்டாசு ஆலைகளை கண்காணிக்க வேண்டும்.  பட்டாசு தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும்.  சிவகாசி பட்டாசு வெடி விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் " என்று குறிப்பிட்டுள்ளார்.