"கையில் பிடித்து வானில் சென்று வெடிக்கக்கூடிய பட்டாசுகள்"- தமிழக அரசு பரபரப்பு அறிக்கை
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த வருடம் பட்டாசு வெடிபொருட்கள் சந்தையில் கையில் பிடித்து வானில் சென்று வெடிக்கக்கூடிய பட்டாசுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பல்வேறு தன்னார்வலர்கள் மற்றும் செய்தியாளர்களிடமிருந்து தகவல் வரப்பெற்றுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
இதுபோன்று வானில் சென்று வெடிக்கக்கூடிய பட்டாசுகளை கையில் பிடித்து வெடிக்கும்போது தலை, முகம், கைகளில் கடுமையான தீக்காயங்கள் ஏற்படும், விரல்கள் சிதைவடைதல், கண் பார்வை பாதிப்பு ஏற்படும். உயிருக்கு ஆபத்தான விபத்துகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக குழந்தைகளை எக்காரணம் கொண்டும் இதுபோன்ற பட்டாசுகளை பயன்படுத்த பெற்றோர்கள் அனுமதிக்கக்கூடாது என கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
அரசின் 5 அதிரடி கட்டளைகள்:
1. பண்டிகை காலங்களில் பட்டாசுகளை வெடிக்கும்போது பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.
2. அதிக வெடிப்புத் திறன் கொண்ட பட்டாசுகள், வானில் சென்று வெடிக்கக்கூடிய பட்டாசுகள் மற்றும் ராக்கெட் உள்ளிட்ட ஆபத்தான பட்டாசுகளை *ஒருபோதும் கையில் பிடித்து வெடிக்கக் கூடாது.*
3. தற்போது சந்தையில் கிடைக்கும் கையில் பிடித்து வானில் சென்று வெடிக்கக்கூடிய பட்டாசுகளை பொதுமக்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.
4. பட்டாசுகளை எப்போதும் தரையில் வைத்து, பாதுகாப்பான தூரத்தில் நின்று மட்டுமே வெடிக்க வேண்டும். வெடிக்காத பட்டாசுகளை மீண்டும் பற்ற வைக்க முயற்சிக்கக் கூடாது.
5. குழந்தைகள் பட்டாசு வெடிக்கும் போது பெற்றோர்கள் அல்லது பெரியோர்களின் மேற்பார்வையில் மட்டுமே வெடிக்க வேண்டும். மேலும் பட்டாசு வெடிக்கும் இடத்தில் பாதுகாப்பு கருதி வாளியில் தண்ணீர் வைத்துக் கொள்ள வேண்டும்.
பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றி, பட்டாசு விபத்துகள் இல்லாத மகிழ்ச்சியான பண்டிகையைக் கொண்டாடுமாறு தமிழக அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.