சுட்டெரிக்க போகும் அக்னி வெயில்..! - "வெளியே வராதீங்க" எச்சரிக்கும் வெதர்மேன் பிரதீப் ஜான்..!
தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வானிலை நிலவரம் குறித்து முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார். மே 1ஆம் தேதி முதல் வட மாவட்டங்களில் கடும் வெயிலும், பிற மாவட்டங்களில் மழையும் பெய்யக் கூடும் எனவும் வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது எக்ஸ் தளத்தில் கூறுகையில், மே 1 முதல் KTCC பகுதியில் கடும் வெயில்; மாநிலத்தின் பிற பகுதிகளில் மழை திரும்பும். மே 1 முதல் உள்நாட்டு, தென் மற்றும் மேற்கு தமிழ்நாட்டில் மழை மீண்டும் தொடங்கினாலும், ஆந்திர எல்லைக்கு அருகிலுள்ள பகுதிகளான சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கடும் வெயிலும் சுட்டெரியும்.
சென்னை புறநகர் பகுதிகளில் வெப்பநிலை எளிதாக 40 டிகிரி செல்சியஸை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேலூரில் ஏப்ரல் 7, 2026 அன்று பதிவான 42 டிகிரி செல்சியஸ் மீண்டும் எட்டப்படும் வாய்ப்பு உள்ளது. எளிய வார்த்தைகளில் சொன்னால், ஆந்திராவுக்கு அருகிலுள்ள பகுதிகள் அதிக வெப்பத்தால் பாதிக்கப்படும். கடலோரத்தின் மிகவும் அருகிலுள்ள பகுதிகள் மட்டும் சற்றே தப்பிக்கலாம்.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் மற்றும் வட தமிழ்நாடு மக்கள் கவனிக்க வேண்டும். மே 1,2ஆம் தேதி முதல் காலை 11.00 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை நேரடி வெயிலில் செல்லாமல் இருக்க வேண்டும். எப்போதும் குடை மற்றும் தண்ணீர் பாட்டிலை எடுத்துச் செல்ல வேண்டும்" என்று கூறினார்.
சென்னை வானிலை மையம் வெளியிட்ட தகவலின்படி, தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. அதன்படி, மே 26,27ஆம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென்தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏப்ரல் 28,29ஆம் தேதிகளில் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் தேனி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழையும், தென்தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
ஏப்ரல் 30ஆம் தேதி கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) மிதமான முதல் கன மழையும், இதர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 1ஆம் தேதி நாமக்கல், கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) மிதமான முதல் கன மழையும், இதர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என வானிலை மையம் கூறியிருக்கிறது.