×

டெல்லி கோர தீ விபத்து : ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேருக்கு நேர்ந்த துயரம்..!

 

டில்லியின் மாள்வியா நகரில்,'ப்ளரிஷ் ஸ்டே பி அண்ட் பி' என்ற பெயரில் ஹோட்டல் செயல்பட்டு வருகிறது.உணவகத்துடன் கூடிய ஆறு மாடிக் கட்டடத்தில் வெளிநாட்டினர் மட்டுமின்றி அருகில் உள்ள, தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நோயாளிகளின் உறவினர்களும் அறைகள் எடுத்து தங்கியிருந்தனர். இந்த ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.அங்கிருந்த அறைகளில் 79 பேர் தங்கியருந்த நிலையில், 58 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். தீயில் சிக்கியும், மூச்சுத்திணறியும் பெண்கள், குழந்தைகள் உட்பட 21 பேர் பலியாகினர். இதில், ஆறு பேர் வெளிநாட்டினர் என்றும் ஒன்பது பேர் நம் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. மீதமுள்ள ஆறு பேரின் உடல்கள் விபத்தில் கருகியதால் அவர்களை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.


இந்நிலையில், தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள தந்தைக்கு உதவியாக ஹோட்டல் அறையில் தங்கியிருந்த மகன் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எட்டு பேர் இந்த விபத்தில் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானாவின் குருகிராமைச் சேர்ந்தவர் விவேக் அகர்வால். இவரின் தந்தையான ராதே ஷ்யாம் அகர்வால், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு உதவும் வகையில், அந்த ஹோட்டலில் விவேக் மற்றும் அவரது தாயார் பிரேமலதா ஆகியோர் ஒரு அறை எடுத்து தங்கியிருந்தனர்.சிகிச்சை பெற்று வரும் ராதே ஷ்யாமை பார்ப்பதற்காக விவேக்கின் மனைவி தர்ஜினி, மகள்கள் ஜிவிஷா, வாரியா மற்றும் உறவினர்கள் மூன்று பேர் இரு தினங்களுக்கு முன் டில்லி வந்தனர். இவர்கள் அனைவரும் இந்த ஹோட்டலில் தங்கியிருந்தனர். தீ விபத்தில் சிக்கி விவேக், அவரது தாயார் பிரேமலதா உட்பட எட்டு பேரும் உயிரிழந்தனர்.

தீ விபத்தில் சிக்கிய போது தன்னிடம் மொபைல் போனில் பேசிய விவேக், 'நாங்கள் அனைவரும் தீ விபத்தில் சிக்கி கொண்டோம். உயிர் பிழைப்பது கடினம். தந்தையை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்' என, கூறியதை உறவினர் புனித் குப்தா கண்ணீர் மல்க நினைவு கூர்ந்தார்.


விபத்து குறித்து டில்லி போலீசார் கூறியதாவது: முதற்கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாகவே ஹோட்டலில் தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது. தடயவியல் நிபுணர்களின் அறிக்கைக்கு பின்னரே விபத்துக்கான காரணம் முழுமையாக தெரியவரும். தீயணைப்பு துறையிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெறாமலே ஹோட்டல் செயல்பட்டதும் தெரியவந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.