சங்கரன்கோவில் அருகே ஓடும் அரசு பேருந்தில் பயங்கர தீ விபத்து: 57 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்!
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து திருநெல்வேலிக்கு அரசு பேருந்து புறப்பட்டு சென்றது. 57 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த அந்தப் பேருந்து, தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் என்.ஜி.ஓ காலனியில் உள்ள ரயில்வே கேட்டு அருகே சென்றபோது, ரயிலின் வருகைக்காக அந்த கேட் மூடப்பட்டிருந்தது.
ஏராளமான வாகனங்கள் ரயில்வே கேட் முன்பாக காத்திருந்த நிலையில், 57 பயணிகளுடன் சென்ற அரசு பேருந்தும் அணி வகுத்து காத்துக் கொண்டிருந்த வாகனங்கள் நின்றிருக்கிறது. அப்போது, ரயில் கடந்த உடன் ரயில்வே கேட் திறக்கப்பட்டது. இதை அடுத்து பேருந்தை இயக்குவதற்காக அதன் ஓட்டுநர் ஸ்டார்ட் செய்துள்ளார்.
இரண்டு, மூன்று முறை ஸ்டார்ட் செய்தபோதும் பேருந்து ஸ்டார்ட் ஆகவில்லை. மாறாக பேட்டரியில் இருந்து கரும்புகை வெளியேறியுள்ளது. தொடர்ந்து பேருந்தில் தீ பிடிக்கவும் தொடங்கியிருக்கிறது. உடனடியாக பேருந்தை ஓரங்கட்டிய ஓட்டுநர், பேருந்து முழுவதுமாக தீப்பற்றி எரிவதற்குள்ளாக பயணிகளை வெளியேறுமாரு எச்சரித்தார்.
ஆனால், பேருந்தின் கதவுகள் திறக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து, எமர்ஜென்சி கதவு வழியாகவும், ஜன்னல் வழியாகவும் வெளியேறி பயணிகள் தங்களை பாதுகாத்துக் கொண்டனர். வெளியேறிய பயணிகளை பத்திரமாக அப்பகுதி மக்கள் மீட்டனர்.
தொடர்ந்து, காவல்துறைக்கும், தீயணைப்பு மீட்பு படைக்கும் பேருந்து தீ விபத்து குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மீட்பு படையினர் பேருந்தில் பற்றி எரிந்த தீயை துரிதமாக செயல்பட்டு முழுவதுமாக அணைத்தனர்.
பயணிகள் வெளியேறிய பின், பேருந்தில் தீப்பற்றியதால் அனைவரும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர்.