மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே பரபரப்பு : மதுரை சென்ட்ரல் திரையரங்கில் பயங்கர தீ விபத்து..!
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மேற்கு கோபுரம் செல்லும் வழியில் அமைந்துள்ள மிகப் பழமையான சென்ட்ரல் திரையரங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்புத் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்து வருகின்றனர்.
வரும் செப்டம்பர் 17ஆம் தேதி மீனாட்சி அம்மன் கோவில் திருக்குடமுழுக்கு நடைபெற உள்ளது. இந்நிலையில் கோவில் நிர்வாகம் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை கோவிலை சுற்றியுள்ள வீதிகளில் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் மேற்கு கோபுரம் செல்லும் வழியில், மிகப் பழமையான சென்ட்ரல் திரையரங்கு அமைந்துள்ளது. செயல்படாத நிலையில் தற்போது மூடப்பட்டுள்ள அந்த திரையரங்க வளாகத்தின் ஒரு பகுதியில், வணிக நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான குடோன் ஒன்று இயங்கி வருகிறது. அதில் பல்வேறு பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த நிலையில், இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மின்கசிவு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
மதுரை பெரியார் பேருந்து நிலையப் பகுதியில் உள்ள தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்க போராடி வருகின்றனர். மேலும் மதுரை டவுன், திருப்பரங்குன்றம், அனுப்பானடி, திருமங்கலம் உசிலம்பட்டி, கல்லுப்பட்டி, மேலூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் உள்ள தீயணைப்பு வாகனங்கள் கோவிலை சுற்றி நிறுத்தப்பட்டுள்ளன. இந்த விபத்தில் உயிர் சேதம் ஏதுமில்லை என தீயணைப்பு துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.