பிளாஸ்டிக் ஆலையில் பெரும் தீ விபத்து - 5 பேர் பலி..!
கர்நாடக மாநிலம் கேர் ஆர் மார்க்கெட் அருகே கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு ஒரு கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து வசித்து வந்தார் ராஜஸ்தானை சேர்ந்த மதன் சிங் (வயது 38). இவர், பிளாஸ்டிக் சமையலறைப் பொருட்கள், பாய்கள் மற்றும் சமையலறைப் பாத்திரங்களை தயாரிக்கும் ஒரு சிறிய உற்பத்திப் பிரிவை அவர் நடத்தி வந்தார். உற்பத்தி செய்யும் கட்டிடத்தின் மேல் தளத்தில் குடும்பத்துடன் மதன் சிங் வசித்து வந்தார்.
இந்த நிலையில், அதிகாலை சுமார் 3 மணியளவில் மதன் சிங் நடத்தி வந்த உற்பத்தி ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவத்தொடங்கியது. இதனையடுத்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து 8 வாகனங்கள், 55 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 21 அதிகாரிகள் சம்பவ இடத்தில் விரைந்தனர்.
கட்டிடத்தில் எரிந்துகொண்டிருந்த தீயை வெகு நேரம் போராடி கட்டுக்குள் கொண்டி வந்தனர். இருப்பினும் இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மதன் சிங், சங்கீதா மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகள் ரித்தேஷ், விஹான் மற்றும் பக்கத்து வீட்டுக்காரர் சுரேஷ் குமார் (26) ஆகிய 5 பேரும் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களில் உடலை மீட்ட அதிகாரிகள் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தீ விபத்துக்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.