சென்னையில் ரூ.249 கோடியில் அமைக்கப்பட்ட பிரமாண்ட FINTECH TOWER- மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சென்னை நந்தம்பாக்கம் நிதிநுட்ப நகரத்தில் ரூ.249 கோடி செலவில் 5.56 லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள நிதிநுட்ப கோபுரத்தினை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
வங்கி மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவன சேவைகளை, வளர்ந்துவரும் நவீன தொழில்நுட்பத்துடன் ஒருங்கிணைக்கும் நிதி நுட்பத்துறையில் சிறந்து விளங்கும் மாநிலமாக தமிழ்நாட்டினை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில், ரூ.12 ஆயிரம் கோடி அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கும் வகையில் 80 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும் வகையில் நிதிநுட்ப நகரம் மற்றும் ரூ.1000 கோடிக்கு முதலீடுகள் ஈர்க்கும் வகையில் 7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும் வகையில் நிதிநுட்ப கோபுரம் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2023 ஆண்டு நந்தம்பாக்கத்தில் 56 ஏக்கர் நிலப்பரப்பில், நிதிநுட்ப நகரம் அமைப்பதற்கும், அதில் முதற்கட்டமாக 5.56 லட்சம் சதுர அடி கட்டட பரப்பளவில் சர்வதேச தரத்திலான நிதிநுட்ப கோபுரம் என்ற அடுக்குமாடி கட்டடம் கட்டுவதற்கும் அடிக்கல் நாட்டினார்.
இந்நிலையில், 249 கோடி ரூபாய் செலவில் இரண்டு அடித்தளங்கள், தரை மற்றும் பதினொன்று தளங்களுடன் 5.56 லட்சம் சதுர அடி பரப்பளவில், அதிநவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள நிதிநுட்ப கோபுரத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். நிதி மற்றும் நிதிநுட்ப நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளை தொடங்குவதற்கு தேவையான அனைத்து வசதிகளுடன் தயார் நிலையில் உள்ள உயர்தர அலுவலக இடங்கள் நிதிநுட்ப கோபுரத்தில் (Fintech Tower) அமைக்கப்பட்டுள்ளன. இதேபோன்று பல தனியார் நிறுவனங்களும் இங்கு தங்களின் கோபுரத்தை அமைக்க உள்ளதாக தெரிவித்தார் தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா. இந்த கோபுரம், LEED Platinum Green Building தரத்துடன் உருவாக்கப்பட்ட இக்கட்டடம், வாகன நிறுத்த வசதிகள், 250 மற்றும் 50 இருக்கை வசதிகளைக் கொண்ட கூட்டரங்கங்கள், உணவகங்கள், உடற்பயிற்சிக் கூடம், குழந்தைகள் பராமரிப்பு மையம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளது.
பன்னாட்டு மற்றும் இந்திய நிதி நிறுவனங்களுக்கான உலகத்தரம் வாய்ந்த அதிநவீன வங்கி மற்றும் காப்பீடு உள்கட்டமைப்பு வசதிகள் இந்த நிதிநுட்ப நகரத்தில் அமைக்கப்பட்டுள்ளதால், தடையற்ற வணிக சூழலை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உலகத் தரத்திலான உள்கட்டமைப்புடன் உருவாக்கப்பட்ட இக்கட்டடம், தமிழ்நாட்டின் நிதிநுட்ப வளர்ச்சிக்கான முக்கிய மையமாக திகழும்.