☰
×

உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ.7 லட்சம் நிதியுதவி- விஜய் 

 

சென்னை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று படகு என்ஜின் பழுதடைந்து ஆந்திரப் பிரதேச மாநில கடற்பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட மீனவர்கள் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த 29.10.2026 அன்று விசைப்படகில், மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்ற திரு.கா.பக்கிரிசாமி (எ) சூர்யா (வயது 49), திரு.ம.குப்பன் (வயது 48), திரு.சே.மோகன் (வயது 47), திரு.கா.ராஜேஷ் (வயது 52), திரு.ஆ.முருகன் (வயது 48), திரு.லா.குப்புசாமி (வயது 58), திரு.சி.விஜயகாந்த் (வயது 44), திரு.அ.அரவிந்த் (வயது 40), திரு.மு.நாராயணன் (வயது 57) ஆகிய 9 மீனவர்கள் தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறையால் வழங்கப்பட்ட புயல் மற்றும் வானிலை முன்னெச்சரிக்கையினால், ஆந்திரப் பிரதேச மாநிலம், நிஜாம்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் பாதுகாப்பாக இருந்த நிலையில், 02.11.2026 அன்று இரவு, அந்தப் படகு ராமாயபட்டினம் துறைமுகத்தை நோக்கிச் சென்றதாகவும், நடுக்கடலில் என்ஜின் செயலிழந்ததாகவும், காணாமல் போன படகில் இருந்த மீனவர்களால் வயர்லெஸ் தொடர்பு மூலம் மற்றொரு விசைப்படகில் இருந்த மீனவர்களுக்கு 03.11.2026 அன்று அதிகாலை தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், காணாமல் போன படகிலிருந்து எவ்வித தகவல்தொடர்பும் கிடைக்கப் பெறாததாலும், அவர்களது இருப்பிடம் குறித்த எவ்வித தகவலும் தெரியாததாலும், சென்னை மீன்பிடித் துறைமுக மீன்பிடிப் படகுகள், ஆந்திரப் பிரதேச மாநில மீன்பிடிப் படகுகள் மற்றும் இந்தியக் கடலோரக் காவல்படைக் கப்பல்கள் மூலம் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், காணாமல் போன மீனவர்களின் நிலையை அறிய, ஆந்திரப் பிரதேச மாநில அதிகாரிகள் மற்றும் காணாமல் போன மீனவர்களின் குடும்பங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுமாறும் தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அறிவுறுத்தப்பட்ட நிலையில், ஆந்திரப் பிரதேச மாநிலம், பிரகாசம் மாவட்டத்தில் உள்ள கோதபட்டினம் கடலோரத்தில் திரு.சே.மோகன், திரு.ஆ.முருகன், திரு.சி.விஜயகாந்த் ஆகிய மீனவர்கள் சடலங்களாக மீட்கப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்ற துயரமான செய்தியை அறிந்து மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.

மேலும், மீட்கப்பட்டுள்ள இரண்டு சடலங்களை அடையாளம் காணும் பணியினையும், காணாமல் போன எஞ்சிய மீனவர்களைத் தேடும் பணியினையும் விரைவுபடுத்துமாறு உத்தரவிட்டுள்ளேன். இச்சம்பவத்தில் உயிரிழந்த மீனவர்களை இழந்துவாடும் அவர்களது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினருக்குத் தலா ஏழு இலட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கிடவும், அதில் தலா இரண்டு இலட்சம் ரூபாய் உடனடியாக வழங்கிடவும், அவர்களது உடல்களை அரசு செலவில் தமிழ்நாட்டிற்குக் கொண்டுவந்து அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளேன்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளார்.