×

போரூர் - வடபழனி இடையிலான மெட்ரோ ரயில்- பாதுகாப்பு ஆணையர் இறுதி ஆய்வு

 

போரூர் முதல் வடபழனி வரையிலான மெட்ரோ வழித்தடத்தில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் இன்றும் நாளையும் இறுதி ஆய்வினை மேற்கொள்கிறார்.

பூந்தமல்லி - போரூர் வரை ரயில் பாதைகள் அமைக்கப்பட்டு, அனைத்து கட்ட சோதனை பணிகள் முடிக்கப்பட்ட நிலையில் தற்போது போரூர் -வடபழனி இடையே மெட்ரோ ரயிலை இயக்கி ரயில்வே பாதுகாப்பு ஆணையர் செளத்ரி தலைமையிலான குழுவினர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

போரூர் - வடபழனி இடையே கட்டமைப்புகள், சிக்னல் தொழில்நுட்பம், உயர்மட்ட மின்பாதை பணிகள் நிறைவடைந்துள்ளன. இதையடுத்து, இத்தடத்திலும் மெட்ரோ ரயில் இயக்கி சோதனை நடத்தப்பட்டு வருகின்றன. இந்த இறுதி கட்ட சோதனை இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இன்று மெட்ரோ வழி தடங்கள் மற்றும் ரயில் நிலையங்கள் இறுதியா ஆய்வு செய்யப்பட்ட நிலையில் நாளைய தினம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மெட்ரோஸ் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறையில் இருந்து ரயில்களை இயக்கி ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.  கடந்த முறை போரூர் - வடபழனி இடையேயான மெட்ரோ ரயில் பாதையை ஆய்வு செய்த ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஒரு சில காரணங்களால் இந்தத் தடம் தற்போது பயணிகள் போக்குவரத்திற்குத் தயாராக இல்லை என்றும் பயணிகள் பாதுகாப்பு வசதிகளை சரி செய்ய மெட்ரோ நிர்வாகத்திற்கு அறிவுறுத்திருந்தார். அதனடிப்படையில் பணிகள் முடிந்த நிலையில் தற்போது போரூர் -வடபழனி இடையே மெட்ரோ ரயிலை இயக்கி சோதனை நடைபெற்று வருகிறது.

இந்த இறுதி கட்ட சோதனைக்கு பிறகு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் செளத்ரி இந்திய ரயில்வே வாரியத்திடம் ஆவணங்களை சமர்ப்பிக்க அதனை தொடர்ந்து இந்திய ரயில்வே வாரியம் மெட்ரோ ரயில்களை இயக்க முறையான அனுமதி சான்றிதழ் வழங்கும். இந்திய ரயில்வே வாரியத்தின் சான்றிதழை பொறுத்தவரை வெகு விரைவில் கிடைக்கும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.