×

இன்று தொடங்கிய வேட்புமனு தாக்கல்- ஒருவர் கூட தாக்கல் செய்யவில்லை

 

புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் இன்று துவங்கியது. 17 மையங்களில் அதிகாரிகள் தயார் நிலையில் இருந்தும் முதல் நாளில் ஒருவர் கூட மனு தாக்கல் செய்யவில்லை.

புதுச்சேரி மாநில சட்டமன்றத் தேர்தல் வரும் 9-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள தெற்கு, வடக்கு, நெடுங்காடு, நிரவி, திருநள்ளாறு ஆகிய ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்புமனு பெறும் பணிகள் இன்று காலை 11.00 மணிக்குத் தொடங்கின. காரைக்கால் துணை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட மூன்று இடங்களில் வேட்புமனுக்களைப் பெறுவதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் இருந்தன. எனினும், முதல் நாளான இன்று வேட்பாளர்கள் யாரும் வேட்புமனு தாக்கல் செய்ய வரவில்லை.

இருப்பினும், தேர்தல் விதிமுறைகளின்படி அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு, வேட்புமனு தாக்கல் நடைபெறும் மூன்று மையங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக மத்திய துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வேட்பாளர்கள் இன்று முதல் வரும் 23-ஆம் தேதி வரை தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யலாம் என தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாக்கல் செய்யப்படும் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 24-ஆம் தேதியும், மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் 26-ஆம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.