இந்த மின்னஞ்சலில் புகார் கொடுங்க..! கடந்த ஆட்சி ஊழல்களை தோண்ட தயாராகும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா!
பொதுப்பணி துறை மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு அரசின் நிர்வாகம் மிக நேர்மையாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் நடைபெற்று வருகிறது. ஆனால், கடந்த ஆட்சிகளில் தமிழ்நாடு அரசின் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறையில் மையப்படுத்தப்பட்ட ஊழல்கள், திட்டமிடப்பட்ட விதிமீறல்கள், நிர்ணயிக்கப்பட்ட லஞ்ச தொகை எனப் பல முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக அறியமுடிகிறது.
பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறைகளின் ஒப்பந்ததாரர்களிடம் அப்போது அதிகாரத்தில் இருந்தவர்கள், அவர்களின் குடும்ப உறவுகள், அதிகாரத்தில் இருந்தவர்களுக்கு நெருக்கமாக இருந்தவர்கள், ஒப்பந்தம் வாங்கி தருவதாக வாக்குறுதி கொடுத்து பணம் வாங்கியுள்ளனர். பலரிடம் பணத்தையும் பெற்றுக் கொண்டு முறையாக வேலைகளையும் ஒதுக்காமல், ஒப்பந்ததாரர்கள் பலர் ஏமாற்றப்பட்டுள்ளார்கள்.
இது தொடர்பான பல புகார்கள் தற்போது எங்களுக்கு வந்து கொண்டிருக்கின்றன. மேலும், இதுபோல் பாதிக்கப்பட்டவர்களோ, பணம் கொடுத்து ஏமாற்றப்பட்டவர்களோ புகார் கொடுக்க விரும்பினால், என்னிடமோ அல்லது லஞ்ச ஒழிப்பு (DVAC) காவல் துறையினரிடமோ புகார் கொடுக்கலாம். என்னிடம் நேரடியாகவோ அல்லது minister.pwd.hd.tn@gmail.com என்ற மின்னஞ்சல் வழியாகவோ புகார் தெரிவிக்கலாம்.
புகார் தெரிவிப்பவர்கள் பற்றிய விபரங்கள் பாதுகாக்கப்படுவதுடன், அவர்களுக்குத் தேவையான சட்ட பாதுகாப்பும் வழங்கப்படும். விரைவில் அவர்கள் இழந்த பணத்தை மீட்க உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். இனிவரும் காலங்களில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறையில் இது போன்ற முறைகேடுகள் நடைபெறாது.
ஒப்பந்தங்கள் அனைத்தும் நேர்மையுடனும். வெளிப்படைத் தன்மையுடனும் நடைபெறும் என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
குதிரை பேர விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறையில் கடந்த ஆட்சியில் நடந்த ஊழல் குறித்து புகார் அளிக்கலாம் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வெளிப்படையைக அழைப்பு விடுத்துள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.