×

மாணவியை கத்தியால் குத்திய சக மாணவன்! வகுப்பறையில் நடந்த கொடூரம்

 

கோவை சரவணம்பட்டி தனியார் கல்லூரியில் வகுப்பறையில் வைத்து முதலாமாண்டு மாணவியை கத்தியால் குத்திய சக மாணவனால் பரபரப்பு ஏற்பட்டது. 

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்தவர் ஹர்ஷவர்தன் (18) . இவர் சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் பொறியியல் ( KG ) கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் தன்னுடன் படிக்கும் 17 மாணவியை காதலித்து வந்ததாக  கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று வழக்கம் போல் இருவரும் கல்லூரிக்கு வந்தனர். பின்னர் வகுப்பறையில் இருந்த போது  ஹர்ஷவர்தன் வீட்டில் இருந்து எடுத்து வந்த கத்தியால் மாணவியை குத்தியதாக கூறப்படுகின்றது. இதில் மாணவியின் கை, முதுகு உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது.

காயமடைந்த மாணவியை மீட்ட சக மாணவர்கள், அந்த கல்லூரி குழுமம் நடத்தி வரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனிமதிக்கபட்டார். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கல்லூரி வளாகத்திற்குள் நடந்த இந்த சம்பவம் குறித்து சரவணம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் இருவரும் காதலித்து வந்ததாகவும், கடந்த சில தினங்களாக மாணவி தனது நண்பர்களுடன் பேசுவதை தவிர்க்க வேண்டும் என ஹர்ஷவர்தன் வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் மாணவி தொடர்ந்து நண்பர்களுடன் பேசி வந்தார். இதனால் இருவருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆத்திரத்தில் மாணவியை கத்தியால் குத்தியது தெரியவந்தது. இதையடுத்து மாணவரை போலீசார் பிடித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.