×

தமிழ் வழியில் பயின்ற மாணவர்கள்  தேர்வுக்கட்டணம்  செலுத்த தேவையில்லை - தேர்வுத்துறை இயக்குநரகம் அறிவிப்பு..

 


தமிழ் வழியில் பாடம் கற்கும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு  தேர்வுக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக  தமிழக அரசு அறிவித்துள்ளது  

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் அல்லது ஏப்ரல்  மாதத்தில் கட்டாயம் நடத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருந்தது.  அதன்படி பொதுத்தேர்வுக்கு மாணவர்கள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் 12 ஆம் வகுப்பு பொதுதேர்வு எழுதும் மாணவர்களிடம் தேர்வுக் கட்டணத்தை வசூலித்து வரும் 20 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் செலுத்த வேண்டும் என அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தேர்வுத்துறை இயக்குநரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதேசமயம்   தமிழை பயிற்று மொழியாக கொண்டு, தமிழ் வழியில் பயின்ற  தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் தேர்வு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக  தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமவர்மா தெரிவித்துள்ளார்.  அரசு மற்றும் அரசு உதவிப்பெறும்  பள்ளிகளில் பயிலும் MBC, SC,ST பிரிவு மாணவர்களும் தேர்வுக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மேலும் பார்வைத் திறனற்ற, வாய் பேச முடியாத, காது கேளாத,  மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும்  தேர்வுக்கட்டணத்தி இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.