☰
×

அரசுப் பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலப்பு- விசாரணை தீவிரம்

 

திண்டுக்கல் மாவட்டம், பழனி மானூர் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியின் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் தொடர்பாக, மாவட்டக் கல்வி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டத்திற்கு உட்பட்ட மானூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்கள் பயன்படுத்தும் குடிநீர்த் தொட்டிக்குள் மனிதக் கழிவு கலக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பள்ளிக் குழந்தைகள் பயன்படுத்தும் குடிநீரில் இத்தகைய இழிவான செயலைச் செய்த விஷமிகளைக் கண்டறிந்து கைது செய்யாமல், பள்ளித் தலைமையாசிரியர் இரண்டு நாட்களாக உண்மையை மறைக்க முயன்றதாக கூறப்படுகிறது. ஊடகங்களில் செய்தி வெளியானதை அடுத்து மாவட்டக் கல்வி அலுவலர் சண்முகநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். முறையான பாதுகாப்பு வசதிகள் இல்லாததால், சமூக விரோதிகள் சிலர் மது அருந்திவிட்டு பள்ளி வளாகத்திற்குச் செல்வதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.


பள்ளி விடுமுறையின்போது சில இளைஞர்கள் அத்துமீறி பள்ளியின் உள்ளே நுழைந்து மது அருந்தியுள்ளதாகவும், அவர்களுக்கு தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். திங்கள் கிழமை பள்ளி திறக்கப்பட்டதும் நீர் தொட்டியை திறந்து பார்த்தபோது மலம் இருந்ததால் அந்த தொட்டியை பயன்படுத்தவில்லை என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.  மாணவர்களுக்கு வேறு இடத்தில் இருந்து குழாய் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருவதாகவும், இதுகுறித்து 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.