×

பிறந்து 56 நாளான குழந்தையை தூங்க வைக்க ஃபேன் போட்ட தந்தை துடிதுடித்து பலி

 

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே குழந்தையை தூங்க வைக்க ஃபேன் பிளக்கை மாட்டியபோது மின்சாரம் தாக்கி தந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
​ 
ஆலங்குடி அருகே உள்ள அரையபட்டி கிராமத்தைச் சேர்ந்த 35 வயதான லோகநாதன், சென்ட்ரிங் தொழிலாளி. இவரது மனைவி சத்யா. இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில், கடந்த 56 நாட்களுக்கு முன்புதான் இவர்களுக்குக் குழந்தை பிறந்துள்ளது.  இந்நிலையில், தனது  குழந்தையை தூங்க வைப்பதற்காக லோகநாதன் வீட்டில் இருந்த மேசை மின்விசிறியின் பிளக்கை சாக்கெட்டில் சொருகியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட 
லோகநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

​இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆலங்குடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிறந்து சில நாட்களே ஆன குழந்தைக்கு மின்விசிறி போடச் சென்ற தந்தை மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.