தண்ணீர் தொட்டிக்குள் குதித்து தந்தை, மகள் தற்கொலை! நாமக்கல்லில் சோகம்
நாமக்கல்லில் தந்தை, மகள் தண்ணீர் தொட்டிக்குள் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் என்.கொசவம்பட்டி யோகா நகரை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற போஸ்ட் மாஸ்டர் மயில்கண்ணன் ( 68), இவருக்கு திருமணமாகி மகன் பிரதீப் கண்ணன் ( 37), மகள் பிரீத்தி கண்ணன் ( 34) ஆகிய இருவரும் உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மயில்கண்ணனின் மனைவி கஸ்தூரி கருத்து வேறுபாடு காரணமாக தனது தந்தை ஊரான மல்லசமுத்திரத்திற்கு சென்று விட்டார். மேலும் மகன் பிரதீப் கண்ணன் கடந்த 15 ஆண்டுகளாக அமெரிக்காவில் இருந்து வருகின்றார்.
இந்த நிலையில் மயில்கண்ணண், மகள் பிரீத்தி கண்ணன் இருவரும் நாமக்கல்லில் தனியாக இருந்து வருகின்றனர். இருவருக்கும் தீராத சர்க்கரை நோய் இருந்து வந்துள்ளது. மேலும் யாரும் ஆதரவு இல்லாமல் வீட்டில் இருவரும் தனியாக இருந்த நிலையில் சர்க்கரை நோய், மகளுக்கு திருமணம் ஆகாததால் மன அழுத்தம் காரணமாக கடிதம் எழுதி வைத்து விட்டு உறவினர் ஒருவருக்கு செல் போன் மூலம் தகவல் கூறி விட்டு வீட்டிற்குள் இருந்த 9 அடி ஆழமுள்ள தண்ணீர் தொட்டிக்குள் இருவரும் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். உறவினர் கொடுத்த தகவலின் அடிப்படையில் நாமக்கல் காவல் ஆய்வாளர் கபிலன் தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்த போது தண்ணீர் தொட்டிக்குள் இருவரும் சடலமாக கிடந்தனர். இதனையடுத்து இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை க்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.