×

விவசாயிகள் வேதனை..!  அரசு பஸ்சில் அரை கிலோ மல்லிகைப் பூவிற்கு ரூ.13 சரக்கு கட்டணம் வசூல்..!

 

மதுரையை சேர்ந்த விவசாயி ஒருவர், அரசுப் பேருந்தில் அரை கிலோ மல்லிகைப் பூ எடுத்துச் சென்றதற்கு ரூ.13 கட்டணம் வசூலிக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மதுரை சேக்கிபட்டியை சேர்ந்த விவசாயி சந்தோஷ் என்பவர் தனது தோட்டத்தில் விளைந்த மல்லிகைப்பூவில் ½ கிலோவை ஒரு பையில் போட்டு மேலூரில் விற்பனை செய்ய கொண்டு சென்றுள்ளார். இதற்காக சிறுகுடியில் இருந்து மேலூர் சென்ற அரசு டவுன் பஸ்சில் ஏறினார். அவரிடம் இருந்த ½ கிலோ மல்லிகை பூவிற்கு ரூ.13 சுமை கட்டணமாக பஸ் கண்டக்டர் வசூலித்ததாக தெரிகிறது. இதுகுறித்து அவர் சமூகவலைத்தளத்தில் வீடியோ வெளியிட்டு வேதனையை வெளிப்படுத்தி உள்ளார்.

இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 10 கிலோ எடையுள்ள பொருட்களுக்கு மட்டுமே 13 ரூபாய் கட்டணம் வாங்க வேண்டும் என்ற விதிமுறை இருக்கும்போது சிறிய அளவில் கொண்டு செல்லும் மல்லிகைப்பூவுக்கும் விவசாயிகள் மற்றும் பெண்களிடம் கட்டணம் வசூலிப்பதால் விவசாயிகள் வேதனை அடைந்து வருகிறார்கள்.