×

முதல்வர் அறிவிப்புக்கு எதிர்ப்பு- விவசாயிகள் சங்கம் விடிய விடிய போராட்டம்

 

கடலூர் அருகே கொடுக்கன்பாளையத்தில் முதல்வர் அறிவித்த தொழிற்சாலையை வேறு இடத்திற்கு மாற்றக் கோரி விவசாயிகள் சங்கம் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வரும் நிலையில் இரவிலும் போராட்டம் தொடரும் நிலையில் அங்கேயே சமைத்து சாப்பிட்டு வருகின்றனர்.

கடலூர் கடலூர் அருகே உள்ள 164 ஏக்கர் அரசு புறம்போக்கு இடத்தை கடந்த மூன்று தலைமுறைகளாக அந்தப் பகுதி மக்கள் விவசாயம் செய்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் அந்த இடத்தில் இருந்த முந்திரி, பலா உள்ளிட்ட பல்வேறு வகையான மரங்களை ஜேசிபி எந்திரங்களைக் கொண்டு வேரோடு பிடுங்கி எறிந்தனர். இதனை அடுத்து அந்த பகுதி மக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு நிலுவையில் உள்ளது. தொடர் போராட்டத்திலும் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று முன் தினம், சிதம்பரம் வருகை தந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ. 75 கோடி மதிப்பீட்டில் தோல் அல்லாத காலனி பூங்கா கொடுக்கன் பாளையத்தில் அமைக்கப்படும் என்று அறிவிப்பை வெளியிட்டார்.

இந்தச் சூழலில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சாமி. நடராஜன், மாநில தலைவர் டி. ரவீந்திரன் உள்ளிட்ட அந்த கிராம மக்கள் கொடுக்கன் பாளையம் கிராமத்தில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த இடத்தை மக்களுக்கு அனுபவ பட்டா வழங்க வேண்டும். இங்கு அமைவதாக அறிவித்த காலனி பூங்காவை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். இங்கு காலனி பூங்கா அமைத்து நீர் வளத்தையும், நில வளத்தையும் பாழாக்க வேண்டாம். பட்டா வழங்கும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும், தமிழக முதலமைச்சர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தொடர் போராட்டம் இரவிலும் தொடர்ந்து நடைபெற்றது. போராட்ட பந்தலிலேயே சமைத்து சாப்பிட்டு வருகின்றனர். தொடர் போராட்டம் நடத்தி வருவதால் இந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது