பாபநாசம் அருகே கரடி தாக்கி விவசாயி பலி- 2 மணி நேர போராட்டத்துக்கு பின் உடல் மீட்பு
தென்காசி மாவட்டம் கடையம் வனச்சரகத்திற்குட்பட்ட வடமலை சமுத்திரம் பகுதியில் முருகன் என்பவர் கரடி தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரடியிடம் இருந்து அவரது உடலை மூன்று மணி நேரத்திற்கு பின் வனத்துறையினர் மீட்டனர்.
நெல்லை மாவட்டம் பாபநாசம், விகேபுரம் அணவன் குடியிருப்பு, அகஸ்தியர் புரம், அருணாச்சலபுரம், களக்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மற்றும் தென்காசி மாவட்டம் கடையம், பெத்தான் பிள்ளை குடியிருப்பு, பங்களா குடியிருப்பு, வடமலைசமுத்திரம், ஐந்தருவி பகுதி குளித்த பல்வேறு பகுதிகளிலும் கரடி நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. குடியிருப்பு பகுதியில் சாதாரணமாக உலா வரும் இந்த கரடிகள் சமீபகாலமாக பொதுமக்களை தாக்கி வருகிறது. இதுவரை பலரையும் கரடி தாக்கியுள்ளன.
ஊருக்குள் உலா வரும் கரடிகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று வனத்துறையிடம் பலமுறை புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இந்த சூழ்நிலையில் தற்போது கரடி தாக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விவசாயியை கொன்று, வாழை மரங்களை சேதப்படுத்தி ஆக்ரோஷமாக சுற்றித்திரியும் கரடியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறை தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.