×

தோட்டத்தில் விவசாயி மர்ம மரணம்! எந்த காயமின்றி இறந்து கிடந்ததால் சந்தேகம்

 

பேரையூர் அருகே தோட்டத்தில் விவசாயி மர்ம மரணம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே மெய்யணூத்தம்பட்டி - சங்கரலிங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி கருப்பையா, கிராமத்திலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் சதுரகிரி மலை அடிவார பகுதியில் உள்ள இவரது தோட்டத்தில் இரவு காவல் பணிக்கு சென்று விவசாயம் செய்வதை வாடிக்கையாக வைத்திருந்தாக கூறப்படுகிறது. வழக்கம் போல நேற்று இரவு தோட்டத்திற்கு சென்றவர் இன்று மதியம் வரை வீடு திரும்பாத சூழலில், அவரது குடும்பத்தினர், அக்கம் பக்கத்தில் உள்ள விவசாயிகளை தொடர்பு கொண்டு கருப்பையா ஏன் வீடு திரும்பவில்லை என கேட்டுள்ளனர்.

கருப்பையாவின் தோட்டத்திற்கு சென்று பார்த்த அக்கம் பக்கத்தினர், கருப்பையா ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து அவரது குடும்பத்தினர் மற்றும் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.தகவலறிந்து விரைந்து வந்த சாப்டூர் காவல் நிலைய போலீசார், ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த கருப்பையாவை சோதனை செய்த போது கருப்பையா உடலில் எந்த காயமும் இல்லாத சூழலில், ரத்த கரை எப்படி வந்தது என விசாரணையை தீவிரப்படுத்தினர்.தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி டிஎஸ்பி சந்திரசேகரன் மற்றும் மதுரை மாவட்ட தடயவியல் துறையினர் மர்மான முறையில் இறந்து கிடந்த கருப்பையாவின் உடலை சோதனை செய்த பின் உடற்கூறாய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மர்மமான முறையில் இறந்து கிடந்த கருப்பையாவின் உடற்கூறாய்விற்கு முடிவில் மட்டுமே எப்படி இறந்தார், கொலை செய்யப்பட்டாரா, வேறு காரணங்களால் இறந்தாரா என தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.தோட்டத்திற்கு சென்ற விவசாயி ரத்த வெள்ளத்தில் காயங்கள் இன்றி மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.