×

ஜோதிட துறைக்கு மாபெரும் இழப்பு... பிரபல ஜோதிடர் நெல்லை வசந்தன் காலமானார்!

 

ஜோதிட உலகில் நெல்லை வசந்தன் என்பவரை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஏனெனில் இவர் ஜோதிட தொழில் மட்டுமே செய்யாமல், அதனால் அடைந்த பலனை இல்லாதோருக்கும் ஏழை, எளிய மக்களுக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்துகொண்டே இருந்தவர். தன் வாழ்நாள் முழுவதும் ஜோதிடத்தையும் உதவி செய்தத்தையும் இரு கண்களாகக் கொண்டவர். நெல்லை வசந்தன் மற்றவர்களைப் போல் இல்லாவிட்டாலும் பின்னால் நடக்கவிருப்பதை ஓரளவு துல்லியமாக கணிப்பதில் பெயர்பெற்றவர். 

அந்த வகையில் நவம்பரில் சென்னை, குமரியில் பேய் மழை கொட்டி தீர்த்தது. வெள்ளம் சூழந்து மக்களின் வாழ்க்கை முற்றிலுமே முடங்கிப் போனது. இது நடப்பதற்கு முன்பே கணித்துச் சொன்னவர் நெல்லை வசந்தன். கடக ராசிக்கு கண்டச்சனி காலமாக இருப்பதால் சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வெள்ளம் ஏற்படும் என அவர் மிகச்சரியாக கணித்திருந்தார். அதேபோல திரைத் துறையினர் கைவிடப்பட்ட கவிஞர் நெல்லை பாரதிக்கு உதவிசெய்து அனைவரையும் உருக வைத்தார் வசந்தன்.

நெல்லை பாரதிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு, அவரது ஒரு கால் அறுவை சிகிச்சையால் நீக்கப்பட்டது. அப்போது அவருக்கு யாரும் உதவ முன்வரவில்லை. இச்சூழலில் தான் ஜோதிடர் நெல்லை வசந்தன் அவருக்கு சக்கர நாற்காலியுடன் பொருளுதவியும் வழங்கினார். அப்படிப்பட்ட ஜோதிடர் நெல்லை வசந்தன் திடீர் மாரடைப்பால் இன்று காலமானார். அவரின் இழப்பு ஜோதிட உலகில் நிச்சயம் ஈடு செய்ய முடியாதது. அதனை சக ஜோதிடர்கள் சொல்லும் இரங்கல் செய்தியில் இருந்தே தெரிந்துகொள்ள முடிகிறது.

பிரபல ஜோதிடரான பாலாஜி ஹாசன் தன்னுடைய ட்விட்டர் பதிவில், "எனது குருநாதர் திரு நெல்லை வசந்தன் அவர்கள் இன்று அதிகாலை மாரடைப்பால்
இறந்துவிட்டார். ஜோதிட உலகில் தலைசிறந்த ஞானி, ஜோதிட துறைக்காக தனது 45 ஆண்டு காலத்தை அர்ப்பணித்தவர், எண்ணற்ற நூல்களை எழுதியவர் இன்று இறந்துவிட்டார் இவரது இறப்பு. ஜோதிட துறைக்கே  ஈடுசெய்ய முடியாத இழப்பு” என்று குறிப்பிட்டிருந்தார். இவரை போலவே பல்வேறு ஜோதிடர்களும் நெல்லை வசந்தன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.