×

"கஜானா காலின்னு சொல்லிட்டு 234 எம்.எல்.ஏக்களுக்கும் கார் எப்படி வழங்க முடியும்?"- எழிலன்

 

 

போன ஆட்சியில் கஜானாவை காலி பண்ணிட்டு போயிட்டாங்கன்னு சொல்லிட்டு 234 எம்.எல்.ஏக்களுக்கும் கார் எப்படி வழங்க முடியும்..? என முதலமைச்சர் விஜயின் அறிவிப்பு குறித்து தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ. எழிலன் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க. மருத்துவ அணிச் செயலாளர் மருத்துவர் எழிலன் நாகநாதன், “கஜானா காலி எனக் கூறிவிட்டு அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் கார் வழங்கப்படும் என அறிவிக்கின்றனர். கார் இல்லாத எம்.எல்.ஏ.க்களுக்கு மட்டும் கார் வழங்க வேண்டும். தேர்தல் வேட்புமனுவில் கார் இருப்பதாக தெரிவித்துள்ள எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வழங்கக் கூடாது. 500 யூனிட்டுகளுக்குள்தான் 200 யூனிட் இலவச மின்சாரம் பொருந்தும் என்று த.வெ.க அரசு சொல்கிறது. 501 யூனிட்டிற்கு மேல் சென்றால், ஒரு யூனிட்டிற்கு ரூ.4 என்று கணக்கிடப்படுவதால்தான் தற்போது மின்கட்டணம் அதிகரித்துள்ளது. இப்படித் திட்டங்களைக் கொடுப்பதுபோல் கொடுத்துவிட்டு, மக்களிடம் பணத்தைச் சுரண்டுகிறார்கள்.

மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்தான் முதலில் தொடங்கி வைத்தார். 2021-2026 தி.மு.க. ஆட்சிக் காலத்தில் மட்டும் 25 லட்சம் மருத்துவக் காப்பீட்டு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. முதலமைச்சர் விஜய் இன்று வெளியிட்டுள்ள மூன்று அறிவிப்புகளும் கவர்ச்சிக்கான அறிவிப்புகள் ஆகும். இவை விளம்பரத்திற்காகவும், செய்திகளில் இடம் பெறுவதற்காகவும் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளன. இத்திட்டங்களை எல்லாம் எவ்வாறு செயல்படுத்தப் போகிறார்கள் என்பதை அவர்கள் தெளிவாக விளக்க வேண்டும். பட்ஜெட்டில் காப்பீடுக்கு ரூ.1,400 கோடிதான் ஒதுக்கி உள்ளீர்கள். இப்போது காப்பீடு தொகையை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தும்போது காப்பீடு நிறுவனத்திற்கு நாம் கொடுக்க வேண்டிய தொகை ரூ.4,000 கோடியாக உயரும். இது எப்படி சாத்தியம்?" மருத்துவ காப்பீட்டு நிதி ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டு்ள்ளது. ஆனால் காப்பீட்டு அட்டைகளுக்கான நிதி ஒதுக்கீட்டின் விவரம் தெளிவாக இல்லை. இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் ்்தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும்” என்றார்.