வெளிநாட்டுப் பயணங்களுக்கு கூடுதல் வரியா? பிரதமர் மோடி கொடுத்த அதிரடி விளக்கம்..!
வெளிநாட்டு பயணங்களுக்காக செஸ் உள்ளிட்ட கூடுதல் வரி விதிப்பது குறித்து மத்திய அரசு உயர்மட்ட அளவில் ஆலோசித்து வருவதாகவும், இது தொடர்பாக இறுதி முடிவு எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை என்றும் பிரபல தனியார் ஊடகம் ஒன்றில் செய்தி வெளியானது.
மேலும், அந்த வரி மூலம் கிடைக்கும் தொகை நேரடியாக மத்திய அரசுக்கு செல்லும் என்றும், போர் தொடர்பான நிதிச்சுமை, அதிகரித்துள்ள கச்சா எண்ணெய் விலை மற்றும் இறக்குமதி செலவுகளை சமாளிப்பதற்காக இந்த யோசனை பரிசீலணையில் இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், அந்த செய்தியை மேற்கோள்காட்டி எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பிரதமர் மோடி, அது முற்றிலும் தவறான தகவல் எனவும், அதில் சிறிதளவும் உண்மை இல்லை என்றும் தெரிவித்திருந்தார்.
மேலும், மக்களுக்கான வசதிகளை எளிமைப்படுத்துவதிலும், மேம்படுத்துவதிலும் மத்திய அரசு உறுதியாக உள்ளது எனவும் பிரதமர் மோடி விளக்கம் அளித்தார்.
பிரதமர் மோடியின் இந்த பதில் வெளிநாட்டு பயணங்கள் தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவி வந்த, பல்வேறு ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.