வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளுக்கு இணையவழி விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளுக்கு இணையவழி விண்ணப்ப அவகாசம் நீட்டிப்புக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் மேம்படுத்தப்பட்ட பல்வேறு குடியிருப்பு திட்டங்களில் விற்பனைக்குரிய குடியிருப்பு அலகுகளை, பொதுமக்களுக்கு இணையவழி மூலம் குலுக்கல் (Lottery) முறையில் ஒதுக்கீடு செய்வதற்காக, முன்னணி நாளிதழ்களில் விளம்பரம் வெளியிடப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து, இத்திட்டங்களுக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு கடந்த 21.08.2026 முதல் தொடங்கி, 26.09.2026 வரை பல்வேறு திட்டங்களுக்கு தனித்தனியாக காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டு, தற்போது நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த அறிவிப்பிற்கு பொதுமக்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைக்கப்பெற்று, விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பொதுமக்களின் கோரிக்கையினை ஏற்றும் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் பயன்பெறும் வகையிலும், மேலும் விண்ணப்பிக்க ஆர்வம் உள்ளவர்களுக்கு வாய்ப்பு வழங்கும் நோக்கில், ஒவ்வொரு திட்டத்திற்கும் நிர்ணயிக்கப்பட்ட இறுதி நாளிலிருந்து. மேலும் 15 நாட்கள் கால நீட்டிப்பு வழங்க தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் தீர்மானித்துள்ளது. இதன் மூலம். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, இணையவழி மூலம் (https://tnhb.tn.gov.in) விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ளலாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.