போடுற வெடிய..! ஜனநாயகன் படம் ரிலீசாகும் தேதி அறிவிப்பு..!!
தமிழக முதல்வர் விஜய் கடைசியாக நடித்த படம் ஜனநாயகன். தேர்தலுக்கு முன்பாக சென்சார் சான்றிதழ் பெற்று, வெளியிட முயற்சித்தும் தணிக்கை வாரியம், சான்றிதழ் வழங்கவில்லை.
தேர்தல் முடிந்து, வெற்றி பெற்று விஜய் முதல்வராகவும் பொறுப்பேற்று விட்டார். இந்த சூழ்நிலையில் ஜனநாயகன் படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கியிருப்பதாக தணிக்கை வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.படம் 183 நிமிடங்கள் (3 மணிநேரம் 3 நிமிடங்கள்) என்றும் தெரிவித்துள்ளனர். படம் ரிலீஸ் தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
எனினும் ஜூலை 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
வெளிநாடுகளில் உள்ள விநியோகஸ்தர்களுக்கு வெளியீட்டு தேதியை பட தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி வெளிநாடுகளில் திரையிடுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
கனடாவைச் சேர்ந்த விநியோக நிறுவனமான 'யார்க் சினிமாஸ்' (York Cinemas), 'எக்ஸ்' (X) தளத்தில் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. இது குறித்து விநியோகஸ்தர்கள் கூறியதாவது: ஜனநாயகன் படம் 24ம் தேதி வெளியிடப்படுவதால் இந்த மாதத்தில் வெளியாகத் திட்டமிடப்பட்டிருந்த பெரும்பாலான படங்கள் ஒத்திவைக்கப்பட வேண்டியிருக்கும்; ஏனெனில் முன்னும் பின்னும் வெளியாகும் படங்களின் மீது ஜனநாயகன் படம் தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஜூலை 24ல் படத்தை வெளியிடத் திட்டமிட்டிருந்தவர்கள் இப்போது வேறு தேதியைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். இதில் உள்ள சவால் என்னவென்றால், அடுத்த சில மாதங்களில் ஏறக்குறைய ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கும் ஒரு பெரிய படம் வெளியாகவுள்ளதால், இந்தப் படங்கள் மாறுவதற்கு ஏற்ற தேதி எதுவும் எளிதில் கிடைக்காது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.