சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து..!
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள கீழத்தாயில்பட்டியில் செயல்பட்டு வரும் இந்துஸ்தான் பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்து 4 முறை பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து நிகழ்ந்துள்ளது. பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ள நிலையில், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல்கொடுக்கப்பட்ட நிலையில், தீயணைப்பு வாகனங்கள் நிகழ்விடத்திற்கு விரைந்துள்ளன.
இன்று ஞாயிற்றுக்கிழை பட்டாசு தொழிற்சாலை விடுமுறை என்பதால், உயிரிழப்பு போன்ற அசம்பாவிதங்கள் ஏதும் இருக்காது என கூறப்படுகிறது. இருப்பினும் பட்டாசுகள் தொடர்ந்து வெடித்துச் சிதறுவதால் ஆலைக்கு அருகே நெருங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. பட்டாசுகள் வெடிப்பது முழுமையாக நின்றபிறகே, ஆலைக்குள் யாரேனும் சிக்கியுள்ளார்களா? விதிகளை மீறி பட்டாசு தயாரிக்கும் பணிகள் நடைபெற்றதா? பாதுகாப்பு அம்சங்கள் முறையாக பின்பற்றப்பட்டனவா? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் குறித்து போலீஸார் விசாரணையில் தெரியவரும்.