உற்சாகத்தில் தவெக-வினர்..! இன்று சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு..! 150 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கிடைக்க வாய்ப்பு..!
விஜய் தலைமையிலான அரசுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களது நிலைப்பாட்டை அறிவித்துள்ளன. சி.வி. சண்முகம் அணி முதல்வர் விஜய் தலைமையிலான ஆட்சியைத் தாம் ஆதரிப்பதாக அறிவித்துள்ளார். இவருடன் மொத்தம் 30 எம்.எல்.ஏ-க்கள் உள்ளனர். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், விஜய் தலைமையிலான அரசுக்குத் தனது ஆதரவை வாழ்த்துச் செய்தியின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார். அ.ம.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட மன்னார்குடி தொகுதி எம்.எல்.ஏ காமராஜ், தனது ஆதரவை முதல்வர் விஜய்க்கு தெரிவித்துள்ளார்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க அரசுக்கு எதிராக வாக்களிக்க போவதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இவரது அணியில் 17 எம்.எல்.ஏ-க்கள் உள்ளனர். இதற்கிடையே, ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திருப்பத்தூர் த.வெ.க எம்.எல்.ஏ சீனிவாச சேதுபதி, நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க சென்னை உயர் நீதிமன்றம் இன்று (மே 12) தடை விதித்துள்ளது.
இன்று எதிர்பார்க்கப்படும் ஆதரவு பலம் (மொத்தம் 150); த.வெ.க சார்பில் 106 எம்.எல்.ஏ-க்கள் (உயர் நீதிமன்றத் தடையால் இருவர் நீங்கலாக), சி.வி. சண்முகம் அணி 30 எம்.எல்.ஏ-க்கள், காங்கிரஸ் 5 எம்.எல்.ஏ-க்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (2), இந்திய கம்யூனிஸ்ட் (2), விசிக (2), ஐயுஎம்எல் (2), அ.ம.மு.க 1 எம்.எல்.ஏ (காமராஜ்). இந்தக் கணக்கீடுகளின்படி, முதல்வர் விஜய் தலைமையிலான அரசுக்கு மொத்தம் 150 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கிடைக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.