×

எல்லாரும் கட்சி ஆரம்பித்து விட்டு தான் அனைவர் வீட்டுக்குள் செல்வார்கள் நாங்கள் அனைவரும் வீட்டுக்கு சென்ற பிறகுதான் கட்சி ஆரம்பித்தோம் - முதலமைச்சர் விஜய்..!

 

தமிழ்நாடு சட்டப்பேரவையின் நிகழ்வுகள் 4 நாட்கள் நடைபெற்ற நிலையில், இன்றோடு நிறைவடைகிறது. சட்டப்பேரவைத் தொடரின் விவாதத்தின் போது இதுவரை எந்த கேள்விகளுக்கும் முதலமைச்சர் பதிலளிக்கவில்லை. பதிலுரையின் போது முதலமைச்சர் அவற்றிற்கு பதிலளித்து வருகிறார். 

சட்டசபையில் பேசிய முதலமைச்சர் விஜய், 1990-களில் ரசிகர் மன்றமாக இருந்த போது மக்களுக்கு துணையாக நிற்க ஆரம்பித்தோம். அதன்பின்னர் நற்பணி மன்றமாகவும், விஜய் மக்கள் இயக்கமாகவும் மாறி மக்களோடு மக்களாக நின்று கொண்டிருந்தோம். 2008-ல் ஈழத் தமிழருக்கு ஆதரவாக உண்ணாவிரதப் போராட்டம் செய்தோம். போர் முடிவுக்கு வரவேண்டும், ஈழத் தமிழருக்கு நிம்மதியான வாழ்வு கிடைக்க வேண்டும் என்று அன்றே கோரிக்கை வைத்தோம். கல்வி, கொரோனா, வெள்ளம் போன்ற காலங்களில் துணையாக இருந்தோம் என்றார்.

“எல்லாரும் கட்சி ஆரம்பித்து விட்டு தான் அனைவர் வீட்டுக்குள் செல்வார்கள் நாங்கள் அனைவரும் வீட்டுக்கு சென்ற பிறகுதான் கட்சி ஆரம்பித்தோம். இதை புரியாதவர்கள் தான் நடிகர் கட்சி என பேசுவார்கள். 2026 தேர்தலில் கூட்டணி இல்லாமல், தனியாக நின்றோம். மக்கள் நம்மை தெளிவாக புரிந்து கொண்டு விட்டதால் 35 சதவீத வாக்குகள் பெற்றோம். ஒரு கோடி 72 லட்சம் வாக்குகளை பெற்று தனி பெரும் கட்சியாக நின்றோம். இதனால் இப்போது ஆளும் கட்சியாக அமர்ந்திருக்கிறோம். இரண்டரை ஆண்டில் ஆட்சியை பிடித்துவிட்டார்கள் என சிலர் நக்கலாக பேசுகிறார்கள். அதில் நாம் எந்த அளவு பிரச்சனைகளை சந்தித்தோம் என்பது அனைவருக்கும் தெரியும்” என்று முதலமைச்சர் விஜய் பேசினார்.

பெரியார் சொன்னதிலே ஏற்புடையதை மட்டும் எடுத்துக் கொண்டோம். அவர் கடவுள் மறுப்பு கொள்கையில் உடன்பாடில்லை என்று அறிவித்தோம். நமக்கு கடவுள் நம்பிக்கை உண்டு என்று அறிவித்தோம். யாருடைய நம்பிக்கைக்கும் நாம் எதிரானவர்கள் இல்லை என்று அறிவித்தோம். பெண் கல்வி, சமூக நீதி என இப்படி பெரியாரின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டதாக அறிவித்தோம். அண்ணல் அம்பேத்கரின் சமவாய்ப்பு, சம நீதி, சமத்துவத்தை பின்பற்றுவோம் என்று அறிவித்தோம். பெருந்தலைவர் காமராஜரின் மதச்சார்பின்மையை ஏற்றுக் கொண்டதுடன் அவருடைய நேர்மையான நிர்வாகத்தை ஒரு கொள்கையாக ஏற்றுக் கொண்டதாக நிரூபித்தோம் என்றார்.