”ஓடுவது, ஒளிவது, பதுங்குவது திமுகவினரின் பழக்கம் இல்லை”- சென்னை திரும்பிய எ.வ.வேலு பேட்டி
சிங்கப்பூரில் சிகிச்சை பெற்றுவந்த திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு சென்னை திரும்பினார்.
சாலை டெண்டர் முறைகேடு புகார் தொடர்பாக கடந்த 3ஆம் தேதியன்று லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு ஆஜராகவில்லை. உடல்நலக்குறைவு காரணமாக சிங்கப்பூரில் சிகிச்சை பெற்றுவந்ததாக அவரது வழக்கறிஞர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இருதய சிகிச்சை முடிந்து சிங்கப்பூரில் இருந்து சென்னை திரும்பினார் எ.வ.வேலு. தமிழகம் திரும்பிய எ.வ.வேலு லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணைக்கு ஆஜராவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்த திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, “இதயம் சம்பந்தப்பட்ட சிகிச்சையை சிங்கப்பூரில் தொடர்ந்து எடுத்து வருகிறேன். மருத்துவரின் ஆலோசனைக்கு பின்னர் சென்னை திரும்பியுள்ளேன். ஓடுவது, ஒளிவது போன்ற பழக்கம் எல்லாம் திமுகவிற்கு எப்போதும் இல்லை” என்றார்.