ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலி என அறிவிப்பு!
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை தேர்தலில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் திருமகன் ஈ.வெ.ரா. போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் கடந்த ஆண்டு மாரடைப்பால் மரணம் அடைந்த நிலையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், திருமகன் ஈ.வெ.ரா.வின் தந்தையுமான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த நிலையில், ஈவிகேஎஸ் இளங்கோவவன் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்தார். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி மீண்டும் காலியானது.
இந்த நிலையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம் கடிதம் அனுப்பியுள்ளது. சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவை தொடர்ந்து அடுத்த 6 மாதத்திற்குள் இடைத் தேர்தல் நடைபெற உள்ளது.