×

இபிஎஸ் ஷாக்..! பொங்கலுக்குள் கூட்டணி பற்றி அறிவிப்பு வரும் - ராமதாஸ்..!  

 

தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், அன்புமணி கூட்டம் ஒப்பந்தம் போட்டாரா, கையெழுத்து போட்டாரா என்பது எனக்கு தெரியாது. ஆனால் நான் தொடங்கிய கட்சியை யாரும் உரிமை கொண்டாட தகுதியில்லை. அன்புமணி எனக்கே வேட்டு வைப்பார் என்று எனக்கு முன்பே தெரியவில்லை. இந்திய அளவில் அங்கீகாரம் பெறும் அளவிற்கு பாமகவை வளர்த்திருக்கிறேன். கடும் எதிர்ப்பை மீறித்தான் அன்புமணியை கட்சியில் சேர்த்து மத்திய அமைச்சராக்கினேன். தற்போது அன்புமணி செய்த தில்லு முல்லு காரணமாகவே பாமகவில் இருந்து நீக்கினேன். என்னிடம் இருந்து கட்சியை பறிப்பதற்கு சதித்திட்டம் தீட்டி சூழ்ச்சியோடு அன்புமணி செயல்படுவதை மக்கள் அறிவார்கள்.

அன்புமணிக்கு கொஞ்சம் கூட தலைமைப் பண்பு இல்லை. பாமக என்னிடம் மட்டும்தான் உள்ளது. ஒரு நபர், ஒரு கட்சியோடு பேசி கூட்டணி அமைத்துள்ளார்.

அன்புமணி நிறுத்தும் வேட்பாளர்களுக்கு மக்கள் ஓட்டு போட மாட்டார்கள். தந்தைக்கே துரோகம் செய்த அன்புமணி கும்பலுக்கா வாக்களிக்க வேண்டும் என மக்கள் நினைப்பார்கள். அன்புமணி எடப்பாடி பழனிசாமி கூட்டணி பேசியது நீதிமன்ற அவமதிப்பாகும். என் தலைமையில் தான் கூட்டணி பேச முடியும். நான் அமைப்பதே பாமக கூட்டணி.. நான் சேரும் கூட்டணிதான் ஆட்சி அமைக்கும்.அதிமுக - பாமக கூட்டணியை ராமதாஸ் நிராகரித்திருக்கும் சூழலில், ராமதாஸ் தரப்பு எந்த கூட்டணியில் இடம்பெறும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும் அவர் பேசுகையில் அ.தி.மு.க. தரப்பில் இருந்து இதுவரை கூட்டணி குறித்து யாரும் பேசவில்லை .2 நாட்களில் மூத்த தலைவர்களுடன் கலந்தாலோசித்து யாருடன் கூட்டணி என்பது குறித்து அறிவிக்கப்படும் என்று கூறினார்.

பா.ம.க. செயல் தலைவர் ஸ்ரீ காந்தி கூறுகையில், "அன்புமணி அறிவித்துள்ள கூட்டணிக்கு அங்கீகாரம் கிடையாது. நிறுவனர் ராமதாஸ் இறுதி செய்யும் கூட்டணியே உண்மையானது மற்றும் அதுவே வெற்றியைத் தேடித்தரும்" எனத் தெரிவித்துள்ளார்.