×

இபிஎஸ் ஷாக்..! த.வெ.க-வில் இணைந்த அதிமுக முன்னாள் வேலூர் மாவட்ட செயலாளர் வாசு..!

 

வேலூர் மாவட்ட அரசியலில் முக்கியப் புள்ளியாகக் கருதப்படும் அ.தி.மு.க. முன்னாள் மாவட்டச் செயலாளர் எல்.கே.எம்.பி. வாசு, அக்கட்சியிலிருந்து விலகி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். சென்னையில் நடைபெற்ற இந்த நிகழ்வின் போது, அவர் அக்கட்சியின் தலைவர் விஜய் அவர்களை நேரில் சந்தித்து, எம்.ஜி.ஆர். குறித்த புத்தகத்தை நினைவுப் பரிசாக வழங்கித் தன்னை முறைப்படி த.வெ.க-வில் இணைத்துக் கொண்டார்.

எல்.கே.எம்.பி. வாசு அ.தி.மு.க-வில் நீண்ட கால அரசியல் அனுபவம் கொண்டவர். 1991-ல் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட மாணவர் அணிச் செயலாளராகத் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கியவர், பின்னர் 1996-ல் வேலூர் நகரசபை அ.தி.மு.க. குழுத் தலைவராகவும், 2006 முதல் 2010 வரை வேலூர் கிழக்கு மாவட்டச் செயலாளராகவும் செல்வாக்குடன் செயல்பட்டார். மேலும், 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வேலூர் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளராகப் போட்டியிட்ட அவர், இறுதியாக அகில உலக எம்.ஜி.ஆர் மன்றத் துணைச் செயலாளராகப் பொறுப்பு வகித்தார்.

வேலூர், காட்பாடி, ராணிப்பேட்டை உள்ளிட்ட ஒன்பது சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய கிழக்கு மாவட்டச் செயலாளராகப் பணியாற்றிய அனுபவம் கொண்ட ஒரு மூத்த நிர்வாகி த.வெ.க-வில் இணைந்திருப்பது, வேலூர் மாவட்டத்தில் அக்கட்சிக்குக் கூடுதல் பலத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இணைப்பு நிகழ்வின் போது, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் தமிழக வெற்றிக் கழக வேலூர் மாவட்டச் செயலாளர் வேல்முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.