ஜெயலலிதாவால் நீக்கப்பட்டவர் இபிஎஸ் - செங்கோட்டையன் அதிரடி..!
கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், பத்து நாட்களில் கழகத்திலிருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் சேர்க்கப்படவில்லை என்றால் அவர்களுடன் சேர்ந்து கட்சியை ஒருங்கிணைக்கும் வேலைகளில் ஈடுபடுவேன் என செங்கோட்டையன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். தனது கோரிக்கைகளை பரிசீலித்தால் மட்டும்தான் இனி எடப்பாடி பழனிச்சாமி உடன் பரப்புரைகளின் பங்கேற்பேன் என கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அனைவரையும் ஒன்று சேர்த்தால் மட்டும்தான் தேர்தலில் நாம் வெற்றி பெற முடியும். அதை கழகத்தின் பொதுச்செயலாளர் உணர்ந்து கொள்ள வேண்டும்.
2016க்கு பின் வரிசையாக பல தேர்தலில் நாம் தோல்வி அடைந்துவிட்டோம். பாஜக உடன் கூட்டணி வைத்து இருந்தால் 2024ல் 30 இடங்களில் வென்று இருப்போம். வேலுமணி கூட அதை குறிப்பிட்டு பேசினார். கழகம் தொய்வோடு இருக்கிறது என்று எடப்பாடியிடம் கூறினோம். கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் மறப்போம் மன்னிப்போம் என எடப்பாடி பழனிச்சாமி இடம் சொன்னேன். ஆனால் அதை அவர் ஏற்கவில்லை.
பிரிந்தவர்களை சேர்க்கவில்லை என்றால் அதற்கு ஏற்ற நடவடிக்கைகளை நாங்கள் செய்வோம். எடப்பாடியிடம் 6 அமைச்சர்கள் சென்று , பிரிந்து போனவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும். எடப்பாடி பழனிச்சாமி இடம் வலியுறுத்தினோம் அதை எதையும் கேட்க அவர் தயாராக இல்லை. வெளியே சென்றவர்களை தேர்தலுக்கு முன் கட்சியில் சேர்க்க வேண்டும், 10 நாட்கள்தான் காலக்கெடு - அதற்குள் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் , என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறி உள்ளார்.
கட்சிக்கு எதிராக செயல்படுபவர்களை தான் நீக்குவதாக எடப்பாடி பழனிச்சாமி சொல்கிறாரே என கேட்டபோது 2009 ஆம் ஆண்டு ஜெயலலிதா அவர்களால் அதிமுகவிலிருந்து எடப்பாடி பழனிச்சாமியை நீக்கப்பட்டு இருக்கிறார் என நேரடியாக விமர்சனம் முன் வைத்தார் செங்கோட்டையன்.
தென்மாவட்டங்களில் வரும் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற, பிரிந்து சென்றவர்கள் இணைய வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தார். மேலும், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள், பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைப்பதில் எவ்வித தவறும் இல்லை என்றார்.